தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
2136co17rain1_1705chn_3
2136co17rain1_1705chn_3

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

ஜூன் 6ம் தேதி காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பிப்பர்ஜாய் புயலாக மேலும் வலுவடைந்தது. 

இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று காலை 8.30 மணியளவில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 880 கி.மீ தொலைவில் மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து அதன்பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

ஜூன் 7-ம் தேதியான இன்று தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை

ஜூன் 07-யில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூன் 7 கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com