சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்த மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தவர் கோ. தனுஷ் (24). இவர், இதற்காக அங்குள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், தனுஷ் அங்கு உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் தனுஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தனுஷ் நள்ளிரவு திடீரென இறந்தார்.
இதையறிந்த ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஏழுகிணறு காவல் துறையினர் தனுஷ் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்த விவரம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.