
நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள்.
நாமக்கல்: கால்நடை மருத்துவத்துறையில், பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு முறையால் ஆண் கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழங்கிய நீதிமன்ற தீர்ப்பின்படி, மறு சீரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் தகுதி பட்டியலை நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிந்து 6 மாதங்கள் ஆகியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்னும் வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர், தேர்வாணையத்திற்கு உரிய ஆணைகளை வழங்கி சீரமைக்கப்பட்ட பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். பெண்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டு முறையால், ஆண் கால்நடை மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் 120 -க்கும் மேற்பட்ட ஆண் கால்நடை மருத்துவர்களுக்கு உதவி மருத்துவர் பணியிடங்களை வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...