ஆவின் பால் விநியோகத்தில் அடுத்த வாரம் தட்டுப்பாடு?

பால் கொள்முதல் விலை குறித்து பால் உற்பத்தியாளர்களுடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. 
ஆவின் பால் விநியோகத்தில் அடுத்த வாரம் தட்டுப்பாடு?

பால் கொள்முதல் விலை குறித்து உற்பத்தியாளர்களுடன் அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில் அடுத்த வாரம் முதல் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. 

ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்கள் உற்பத்தி செய்யும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தற்போது ஒரு லிட்டர் பால் ரூ. 32-க்கு கொள்முதல் செய்கிறது.

ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ரூ. 7 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இதுகுறித்து உற்பத்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆவின் பொது மேலாளர் சாந்தி, மூன்று மாதங்களுக்கு முன்புதான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டதாகவும், நிதி நெருக்கடியால் மேலும் விலையை அதிகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். 

அதேநேரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.கோவிந்த பாண்டியன், 'கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 3 மட்டுமே உயர்த்தி புதிய கட்டணத்தையும் அரசு வெளியிட்டது. தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்துள்ளன. அரசு கொள்முதல் விலையை உயர்த்தாததால் பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்' என்று கூறினார்.

தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலையை ரூ. 42- லிருந்து ரூ. 46 - ஆக அதிகரித்துள்ளன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பலரும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றனர். 

இதனால் ஏற்கெனவே ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ள மதுரை மண்டலத்தில் நாளை(சனிக்கிழமை) அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் மார்ச் 17 முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. 

பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி வாழப்பாடியில் விவசாயிகள் இன்று போராட்டம்
பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி வாழப்பாடியில் விவசாயிகள் இன்று போராட்டம்

முன்னதாக, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்தும், கருப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்து தர வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். காலதாமதமின்றி, பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: நாடு முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த  பொருள்களுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த விலை கொடுத்து ஏமாற்றி வருகிறது. விவசாயிகளுக்கு பால் விலை கட்டுபடியாகாத காரணத்தினால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததால்,  தமிழக அரசு லிட்டருக்கு ரூ.3  மட்டும் உயர்த்தி கொடுத்தது. ஆனால் நாங்கள் ரூ. 10 விலை உயர்வு கேட்டிருந்தோம். 16-ஆம் தேதி வரை பால் விலை உயர்வுக்கு எங்களை அழைத்துப் பேசாவிட்டால், 17-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு கொள்முதல் நிலையங்களுக்கு பால்  வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளோம் என்றார். 

ஆவின் கொள்முதல் விலை குறைவாக இருப்பதாகக் கூறி, பால் உற்பத்தியாளர்கள் சிலர் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதால் ஏற்கெனவே தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தாலோ அல்லது தமிழ்நாடு அரசுடனான மார்ச் 16 ஆம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலோ தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com