
காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராகக் கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம், முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, என விளங்கும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய பழமையான திருக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய் தொற்று மற்றும் கோயிலின் திருப்பணி காரணமாக சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியையொட்டி ஶ்ரீ கர்ணகி அம்மாள் உடனுறை அருள்மிகு சித்திரகுப்தர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் பாவ கணக்கை நீக்கி புண்ணிய கணக்கை சேர்த்துக் கொள்வதற்காக புதிய நோட்டு மற்றும் பேனாக்கள் சுவாமிக்கு வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவர் சித்திரகுப்தர் மற்றும் கர்ணகி சாமிக்கு திருமணம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளனர்.
காலை முதல் தரிசனம் செய்தவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அதிமுக காஞ்சிபுரம் மாவட்டம் பொருளாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.