திண்டுக்கல்: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாணவி ச.நந்தினி சாதனைப் படைத்தார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வில் 93.77 சதவீத தேர்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 21ஆவது இடத்தை பிடித்தது. இம் மாவட்டத்திலுள்ள 12 அரசுப் பள்ளிகள் உள்பட 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சதானை படைத்துள்ளார். திண்டுக்கல் நகால் நகரிலுள்ள அண்ணாமலையார் மில்ஸ் அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியியல், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய படங்களில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ள மாணவி நந்தினி, தனது பெற்றோர் சரவணக்குமார், பானுப்பிரியா ஆகியோருடன் நாகல்நகர் பொன்சீனிவாசன் நகரில் வசித்து வருகிறார். சரவணக்குமார் தச்சுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.
மாணவி நந்தினி கூறுகையில், எதிர்காலத்தில் ஆடிட்டராக உயர வேண்டும். பிறரிடம் வேலை கேட்டு செல்வதை விட, நானே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றும், பிறருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஆடிட்டர் தொழிலில் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.