
நாமக்கல்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வில் 96.94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாநில அளவில் ஒன்பதாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது.
இங்கு தேர்வு எழுதிய 18,228 பேரில், 17,670 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.13 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.71 சதவீதமாகும்.
பள்ளிபாளையம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதிய திருநங்கை மாணவி ஜி. ஸ்ரேயா 337 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் தமிழக அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி. இவர் மதிப்பெண்கள் விவரம்: தமிழ் - 62, ஆங்கிலம் - 56, பொருளியல் - 48, வணிகவியல் - 54, கணக்குப் பதிவியல் - 58, கணினி பயன்பாடு - 59, மொத்தம்- 337.
மாணவி ஸ்ரேயாவை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி மற்றும் இதர வகுப்பு ஆசிரியர்கள் பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...