
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மிரட்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்க்கப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், தனது பேச்சுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரின் நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.