செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி 

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க  ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி 

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க  ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் வி.எல் சந்தோஷ் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வருகை புரிந்த அண்ணாமலை தனது காளையை அழைத்து வந்தார். மேலும் மண்டபத்திற்கு பாஜக கட்சியினர் அழைத்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கண்காட்சியை அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, பாஜக நிர்வாகிகளால் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கபட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, 'பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30 ம் தேதி முதல் ஜீன் 30 ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளது. பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டி தொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒரு மாத காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துள்ளனர். நானும் எனது காளையை கொண்டு வந்துள்ளேன். அதற்கு காரணம் நேற்று உச்ச நீதிமன்றம் சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை பிரதமர் மோடியின் முழு முயற்சியால் வழங்கியுள்ளது. எனவே அதனைக் கொண்டாடவே ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்துள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் நாளை மாவட்டத் தலைநகரங்களில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளச்சாரயம் பட்டிதொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் விழுப்புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மாநில அரசிற்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வருகின்ற மே 21-ம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை  ஆளுநர் மாளிகையில் சந்தித்து, கள்ளச்சாரயத்திற்கு ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக குழுவினர் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த அவர் டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடக்கூடிய மதுவிற்கும், கள்ளச்சாரயத்திற்கும் ஆளுநர் முற்றுபுள்ளி வைக்க மனு அளிக்க உள்ளோம்.

மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும், அவரை நீக்க கோரி முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என மனு அளிக்கவிருக்கிறோம். 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது முடியாது, அவரை நீக்க ஆளுநர் முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும். 

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு , டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடும் குதிரை போல எல்லா பக்கமும் மது ஓடிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாரயம் கட்டுப்படுத்தப்படும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com