
வாணியம்பாடி அருகே 5 வயது சிறுவன் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் பகுதியில், ஊராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்வதில்லை எனவும், தினமும் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணிக்கான ஊழியர்களும் அப்பகுதிகளில் வருவதில்லை என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருந்தனர்.
இந்நிலையில் ஆறு மாத காலமாக அப்பகுதிகளில் சரிவர அடிப்படை வசதிகள் எதையும் வார்டு உறுப்பினர், கவுன்சிலர், தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவர்கள் சரியாக செய்வதில்லை எனவும், ஆள் பற்றாக்குறை என்று ஊராட்சி நிர்வாகம் காரணம் கூறி வருவதாகவும் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கரிமாபாத் முதல் தெருவில் வசிக்கும் அப்துல் வாகித் மகன் அப்துல்லா என்ற 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் நீர் தேங்கி உள்ளதை கண்டு தானாக முன்வந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டான்.
இந்த சிறுவனின் செயல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. அது மட்டுமின்றி ஐந்து வயதில் அப்பகுதி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் என்ற எண்ணமும், அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்ற குணமும் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
இதையும் படிக்க: மேட்டூரில் தனியார் கூரியர் நிறுவன பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சிறுவனை வெகுவாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.