
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு நகரம் மற்றும் 15-வது நிதிக்குழு திட்டங்களின் கீழ் முடிவுற்ற பணிகளின் திறப்பு விழா தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, திமுக துணைப் பொதுச்செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமை வகித்தார். மாநகராட்சி பகுதிகளில் நிறைவடைந்த திட்டப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும்,மீன்வளம்}மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.