
தூத்துக்குடி: தமிழகத்தில் போதைப்பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்ந் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நாள்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. அண்மையில், மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட, விஏஓ கடத்தல் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: நடராஜர் கோயிலில் செங்கோல் வழிபாடு!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு ஐடி ரெய்டு நடைபெற்றது. ஐடி ரெய்டு வருவது குறித்து எங்களுக்குத் தகவல் சொல்லவில்லை என்று காவல்துறை கூறுகின்றனர். இதிலிருந்து காவல் துறை அரசின், கைப்பாவையாக மாறிவிட்டது என்பது தெரிகிறது. ஐடி ரெய்டு செய்யும் அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவர்களுக்கு, கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ருதுராஜிக்கு பதில் ஜெய்ஸ்வால்?
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். மருத்துவக்கல்லூரி கட்டடம், பள்ளிக்கட்டடங்கள் ஆகியனை முறையாக கட்டப்படுவதில்லை. ஆனால், ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள், எலைட் பார், தானியங்கி மதுவிற்பனை ஆகியவை மட்டும் சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழக அரசை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, அனைவரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி வைத்துள்ளது. இதனால், இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்புக்கு வாழ்த்துகள். இந்திய வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான ஒரு நாள். நமது நாட்டுக்காக ஒரு நல்ல ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை? என்று பாஜக பதில் சொல்ல வேண்டும் என்றார்.
பின்னர், அண்மையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்ஸிஸ் வீட்டிற்குச் சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.