குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை(நவ.13) கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை(நவ.13) கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ்ப் புலவா்களுக்கு எழுந்த சந்தேகத்தை முருகனே சிறுவனாக வந்து தீா்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்ற உற்சவத்தை  முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோயில் கொடிமரத்திற்கும் புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து, சிறப்பு தீபாராதனை காட்டி, கந்த சஷ்டி பெருவிழாவை தொடக்கி வைத்தனர்.

கொடி ஏற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கி கோயில் வளாகத்தை 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர். 

விழாவையொட்டி ஆறு நாட்களுக்கும் காலை பல்லக்கிலும், மாலையிலும் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வருவாா்.

கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, பல்லக்கு, உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் வரும் 18- ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. சூரசம்ஹார தினத்தையொட்டி மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறும். இரவு சண்முகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி அசுரா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெரிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சூரசம்ஹார குழுவைச் சோ்ந்த செங்குந்த மரபினா், அசுரா்கள் வேடமணிந்து வந்து முருகப் பெருமானுடன் போரிடும் காட்சியைக் கோயில் முன்பாக நடத்தவுள்ளனா்.

ஆலயத்தில் தினமும் இரவு லட்சாா்ச்சனையும், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சிவ.வேளியப்பன் அவா்களால் கந்தபுராணச் சொற்பொழிவும் நடைபெறும்.

நவ. 19 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com