அதிகாரிகளை நம்பி ஏமாந்து விட்டோம்: ஏகனாபுரம் விவசாயிகள் குற்றச்சாட்டு!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளை நம்பியும் ஏமாந்து விட்டோம் என ஏகனாபுரம் விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
அதிகாரிகளை நம்பி ஏமாந்து விட்டோம்: ஏகனாபுரம் விவசாயிகள் குற்றச்சாட்டு!

காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளை நம்பியும் ஏமாந்து விட்டோம் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏகனாபுரம் விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்ததுடன் கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளமெண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரா.ராஜகுரு வரவேற்று பேசினார். இக்கூட்டத்திற்கு வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகேயுள்ள ஏகானாபுரத்தை சேர்ந்த விவசாயிகள் விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆட்சியரிடம் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் கூறியது.

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் விளைநிலங்கள், குடியிருப்புகள் வீணாகி விடும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து 491 நாள்களாக விவசாயிகள் போராடி வருகிறோம். விவசாயிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று அதிகாரிகளை நம்பினோம். அதிகாரிகளும் நீர் ஆதாரங்களையோ, குடியிருப்புகளையோ பாதிக்காது என்று சொல்லிவிட்டு இப்போது நிலம் கையகப்படுத்தி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது அதிகாரிகளையும் நம்பி ஏமாந்து விட்டோம். 

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை அரசு எடுக்கும் எனத் தெரிந்தே நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டோம்.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மாவட்ட நிர்வாகம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே வெளியிட்டு அதை மறைத்து விட்டது. மறைமுகமாக அரசாணையை வெளிட்ட மாவட்ட நிர்வாகத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது தெளிவாகிறது எனக் கூறி கூட்டத்துக்கு வந்திருந்த 20க்கும் மேற்பட்ட ஏகனாபுரம் விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இக்கூட்ட நிறைவில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 6 விவசாயிகளுக்கு ரூ.4.06 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன்கள்,4 விவசாயிகளுக்கு ரூ.2.94லட்சம் மதிப்பிலான காளாண் குடில் அமைப்பதற்கான பணி ஆணைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com