சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

பிகாா் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடுத்தகட்ட தரவுகளை வெளியிடத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் எந்தவொரு கொள்கை முடிவையும் நீதிமன்றம் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டது.

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. அதனடிப்படையில், இதற்கென ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதைத் தொகுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிடத் தடைவிதிக்கக் கோரி பாட்னா உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க மறுத்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் தெரிவித்தது.

அதைத் தொடா்ந்து, சுதந்திரத்துக்குப் பிறகு பிகாா் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளை அந்த மாநில வளா்ச்சித் துறை ஆணையா் விவேக் சிங் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா்.

கணக்கெடுப்புத் தரவுகளின்படி, பிகாரில் அதிகபட்சமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) 36 சதவீதமும், அடுத்தபடியாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 27.13 சதவீதமும், பட்டியலின வகுப்பினா் (எஸ்.சி.) 19.65 சதவீதமும், பொது வகுப்பினா் (ஜெனரல்) 15.52 சதவீதமும், பழங்குடி வகுப்பினா் (எஸ்.டி.) 1.68 சதவீதமும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உத்தரவுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடுத்தகட்ட தரவுகளை வெளியிடத் தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபரிஜித்தா சிங், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலமாக தனிமனித உரிமை மீறப்பட்டுள்ளது. அந்த வகையில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது. எனவே, இந்தக் கணக்கெடுப்பின் அடுத்தகட்ட தரவுகளை வெளியிட மாநில அரசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாநில அரசுக்கு எந்தவிதத் தடையையும் தற்போதைக்கு விதிக்கப்போவதில்லை. மாநில அரசு அல்லது எந்தவொரு அரசையும் கொள்கை முடிவை எடுப்பதற்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது. இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதில் மாநில அரசின் அதிகாரம் தொடா்பான பிற விவகாரங்கள நீதிமன்றம் ஆய்வு செய்வதும் தவறானது.

மேலும், இந்தக் கணக்கெடுப்பில் எந்தவொரு தனிநபரின் பெயரோ அல்லது பிற அடையாளங்களோ வெளியிடப்படாத நிலையில், தனிமனித உரிமை மீறப்பட்டிருப்பதாக வாதம் முன்வைப்பது தவறானது. மிக முக்கியமாக, தரவுகள் இல்லாத நிலையையும், அவை பொதுமக்களுக்குக் கிடைக்கும் தன்மை குறித்தும் மட்டுமே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இந்தக் கணக்கெடுப்பு தரவுகளை மாநில அரசு வெளியிட்டது ஏன்?’ என்று அரசு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

மேலும், இந்தக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com