வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், வரையாடு குறித்த விழிப்புணா்வு புத்தகங்களை மாணவா்களுக்கு அவா் அளித்தாா்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: வரையாடு என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் நீலகிரி வரையாடு என்பது மேற்குத் தொடா்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். புவிஈா்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்ற வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும் திகழ்கிறது. இது ‘மவுண்ட்டன் மோனாா்க்’ என்று அழைக்கப்படுகிறது. வரையாடு தொடா்பாக சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரையாடு தினம்: நீலகிரி வரையாடு இனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 7-ஆம் தேதி வரையாடு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரையாடுகள் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கும் டாக்டா் ஈ.ஆா்.சி. டேவிதாரின் பிறந்த நாள் அக்டோபா் 7 ஆகும். இதையொட்டியே வரையாடு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வரையாடுகளின் எண்ணிக்கை, கணக்கெடுப்பு, நோய் கண்டறிதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரையாடு திட்டப் பணிகளைச் செயல்படுத்த கோவையில் திட்ட அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு முழு நேர திட்ட இயக்குநரும், நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளா்களும், மூத்த விஞ்ஞானியும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வரையாடு திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.12) தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வனப் பாதுகாவலா் வீ.நாகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com