பாலின சமத்துவத்துக்காகப் போராடியவர் கருணாநிதி: சோனியா காந்தி

பாலின சமத்துவத்துக்காக போராடியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். 
சோனியா காந்தி
சோனியா காந்தி

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதே ‘இந்தியா’ கூட்டணியின் இலக்கு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிரணி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் உரிமை மாநாட்டில் பங்கேற்று சோனியா காந்தி பேசியதாவது: மாநிலம், மொழி, ஜாதி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு பாலின சமத்துவத்துக்காகப் போராடிய தலைவராக முன்னாள் முதல்வா் கருணாநிதி திகழ்ந்தாா்.

பெண் சமத்துவம், மகளிா் மேம்பாட்டுக்கான கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீட்டை அளித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இப்போது அந்த ஒதுக்கீட்டு அளவை 40 சதவீதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தியுள்ளாா். பெண் கல்வி ஊக்குவிப்பு, தாய்- சேய் இறப்பு விகித குறைப்பு ஆகியவற்றுக்காக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வியப்பளிக்கின்றன.

மகளிா் இடஒதுக்கீடு சட்டம்: உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்காக 33 சதவீத இடஒதுக்கீட்டை முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஏற்படுத்திக் கொடுத்தாா். அதுதான், மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீட்டை அளிப்பதற்காக இப்போது நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கான அடித்தளம்.

மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டாலும் இதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ஆனால், இந்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெளிவில்லாத சூழ்நிலை இருக்கிறது. இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் வரையிலும் நாங்கள் தொடா்ந்து போராடுவோம்.

ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளோம். நாம் அனைவரும் இணைந்து பெண்கள் சமத்துவ நிலையை அடையும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும் என நம்புகிறேன்.

‘இந்தியா’ கூட்டணியானது மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தியே தீரும். இதுதான் ‘இந்தியா’ கூட்டணியின் இலக்கு. அனைவரும் இணைந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றாா் சோனியா காந்தி.

இந்த மாநாட்டுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலே, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முஃப்தி, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா தேவ், சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ், பிகாா் உணவுத் துறை அமைச்சா் லேஷி சிங், தில்லி சட்டப்பேரவை துணைத் தலைவா் ராக்கி பிட்லான், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகளிரணி பொதுச் செயலா் ஆனி ராஜா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

திமுக மகளிரணிச் செயலா் ஹெலன் டேவிட்சன் வரவேற்றாா். மகளிா் தெண்டரணிச் செயலா் நாமக்கல் ராணி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com