
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 9,10,11 மூன்று நாட்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச கைப்பேசி எண் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லக்கூடிய பயணிகளுக்கு 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 5 வழி தடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார் .
குறிப்பாக இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லவதற்கு வசதியாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4675 என மொத்தமாக 10,975 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகிறது, அதேபோல, மற்ற ஊர்களுக்கு 5920 என மொத்தம் 16,795 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறோம் என்றார்.
மேலும், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நவம்பர் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், தினசரி 2100 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் 3167 பேருந்துகளுடன் சேர்ந்து 9467 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல, மற்ற ஊர்களுக்கு 3725 பேருந்துகள் என மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவித்தார்.
தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் ஒன்பதாம் தேதியிலிருந்து பதினொன்றாம் தேதி வரையிலும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பத்து முன்பதிவு மையங்களும் தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்வும், இதுவரை இணையதளம் வாயிலாக 68 ஆயிரம் பயணிகள் தீபாவளிக்கு முன்பதிவு செய்துள்ளதாக கூறினார்.
பொதுமக்கள் பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும் இரண்டு தொலைபேசி எண்களும் ( 9445014450, 9445014436 ) வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். அதேபோல, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடிய ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்க எண் 1800 425 6151 மற்றும் தொலைபேசி எண் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்கள் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் வழித்தடம் குறித்து விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்கள் தங்களுடைய பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்காக இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட இருப்பதாக கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...