
சென்னை: சென்னையை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் (ஆர்ஓபி) அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
ஒருபக்கம் ரயில்நிலையங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் வார இறுதி நாள்களில் ரயில்களில் மாற்றம் மற்றும் திருநின்றவூர் அருகே இருக்கும் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காததும், அந்த பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததும், பயணிகள் துயரத்தை பெருந்துயரமாக மாற்றிவருகின்றன.
இதையும் படிக்க.. கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்
அதோடு, திருவள்ளூர் அரகே வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிமக்களும் நாள்தோறம் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, இப்பகுதியைக் கடந்து செல்கிறார்கள்.
இந்த ரயில் நிலையத்தில் மேம்பாலமோ சுரங்கப்பாதையோ இதுவரை இல்லாததால், பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடந்துதான் மறுபுறம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காலையில் அலுவலகம் மற்றும் பள்ளி செல்வோர் அதிகளவில் இந்தப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்து செல்வது கவலைக்குரியதாக மாறிவருகிறது.
வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மேம்பாலம் கட்டும் பணி 2010 இல் தொடங்கியது, ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
தற்போது வரை, ரயில் நிலையத்தை அடைய வேண்டும் என்றால், 1.5 கிமீ தொலைவில் உள்ள தண்டவாள கேட் பகுதியை பயன்படுத்துவதே பயணிகளுக்கான ஒரே மாற்று வழி.
ஆனால், காலை நேரங்களில் அதிகமான ரயில்கள் இயக்கப்படும்போது பெரும்பாலான நேரங்களில் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால், பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்படும். அவ்வப்போது ஆம்புலன்ஸ்கள் கூட நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
ஒருவழியாக, நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான வழக்குகள் கடந்த 2021-இல் சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், உடனடியாக பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே? பணிகளைத் தடுப்பது எது என்பது இதுவரை யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை என்று அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் மேம்பாலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இப்போது பணிகள் வேகமாக நடைபெறுகிறதா, மேம்பாலப் பணியில் என்ன முன்னேற்றம் என்பது குறித்து உறுதியான எந்த பதிலும் இல்லை என்றே வேப்பம்பட்டில் வசிப்போர் கூறுகிறார்கள்.
மேம்பாலப் பணிகள் ஒரு பக்கமிருக்க, சுரங்கப்பாதை பணிக்கு ரயில்வே 1.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதுவரை 38 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே தண்டவாளத்தை கடப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அப்பகுதி மக்களுக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனால், வேறு வழி?
நிதி ஒப்புதல் கிடைத்ததும் பணியை மீண்டும் தொடங்குவோம் என்று நம்புவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மறுபக்கம், மேம்பாலப் பணிகளுக்காக, நெடுஞ்சாலைத் துறையினர் நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது முடிந்ததும் டெண்டர் விடப்படும் என்றும் கூறுகிறார்கள்.
அதுவரை ரயில் தண்டவாளங்களை பொதுமக்கள் தாண்டுவதற்கு அனுமதிக்கப்படுமா? அப்போது நிகழும் விபத்துகளுக்கும் உயிர் பலிகளுக்கும் யார் பொறுப்பு என்பதற்குத்தான் விடைகள் கிடைக்கப்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.