கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்

ஆப்கனிலிருந்து அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய வணிகர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்


சண்டிகர்: வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்ட அடுத்த நாளில், ஆப்கனிலிருந்து அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய வணிகர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

இது குறித்து அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் மேலாளர் சதீஷ் தையானி கூறுகையில், அண்மை நாள்களாக ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு நாள்தோறும் மூன்று முதல் 4 டிரக்குகளில் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு டிரக்கில் சராசரியாக 2,300 கிலோ கிராம் வெங்காயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, திராட்சை, மாதுளை, ஆப்பிள் போன்றவை 20 - 25 டிரக்குகளிலும், உலர் பழங்கள் 10 - 15 டிரக்குகளிலும் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல், வேளாண் சார்ந்த 1,110 டன்கள் இந்தியாவுக்குள் வந்து குவிகிறது. இது ஆகஸ்ட் வரையில் 450 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்கிறார்.

வெங்காயத்தின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அதன் மீது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக (எம்இபி) டன் ஒன்றுக்கு ரூ. 66,700-ஆக (800 டாலா்) மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது.

‘இந்த விலை நிா்ணயம் அக்டோபா் 29-இல் தொடங்கி வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்’ என்று வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், விலை உயா்வை கட்டுக்குள் வைக்க கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து இருப்புவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்து. ஏற்கெனவே, 5 லட்சம் டன் வெங்காயம் மத்திய அரசிடம் இருப்பில் உள்ளது.

கோயம்பேடு சந்தையில் வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அட்டாரி எல்லை வழியாக, ஆப்கனிலிருந்து வரும் வெங்காய டிரக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக 100 முதல் 150 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, ஆப்கனிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.22-24 ஆக இருந்தது, ஆனால் தற்போது அதுவும் இந்தியாவில் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக விலை சற்று உயர்ந்து  கிலோவுக்கு ரூ.35-40 ஆக உள்ளது. இந்த வெங்காயம் பஞ்சாப், ஹரியானா மற்றும் தில்லியில் விற்பனை செய்யப்படுகிறது. 

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான வெங்காயத் தேவையை மகாராஷ்டிர மாநிலம் பூா்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உற்பத்தி குறைந்ததால், அங்குள்ள முக்கிய வெங்காய சந்தையான நாசிக்கில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு கடந்த ஒருமாதமாக குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து குறைந்துள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இங்கு மொத்த விற்பனையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாசிக்கிலிருந்து வரும் முதல் தரத்திலான ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், பெங்களூரூவிலிருந்து வரும் இரண்டாம் தர பெரிய வெங்காயம் ஒருகிலோ ரூ.60-க்கும், ஆந்திரத்தில் இருந்து வரும் மூன்றாம் தர பெரியவெங்காயம் ஒருகிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபா் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ பெரிய வெங்காயம் அக்டோபா் கடைசி வாரத்தில் ரூ.70-ஐ எட்டியுள்ளது.

சில்லறை விற்பனையில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க அக்டோபா் முதல் வாரத்தில் ரூ.70-க்கு விற்பனையான ஒருகிலோ சின்ன வெங்காயம், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனையில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

இந்தமுறை வெங்காய விலை ஏற்றத்தினால், நாட்டில் உள்ள வெங்காய உற்பத்தியாளர்கள் லாபமடைகிறார்களோ இல்லையோ, ஆப்கன் வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com