
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆவணித்திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை (ஆக.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார்.
இதையும் படிக்க | புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: மத்திய அரசு
நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரத வீதி வழியாக வலம் வந்தது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பாதுகாப்புப் பணியில் காவல்துணைக்கண்காணிப்பாளர் மு.வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...