சங்ககிரியில் வேன் விபத்து: குழந்தை உள்பட 6 பேர் பலி!

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான வேன்.
விபத்துக்குள்ளான வேன்.
Published on
Updated on
2 min read

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஈங்கூர், குட்டபாளையம் பகுதியைத் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பழனிசாமி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் பிரியா.  பிரியாவுக்கும் சேலம், கொண்டாலம்பட்டி, காமராஜர் காலனி, மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சேலம் மாநகராட்சி ஒட்டுநர் காளிப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. செப்.5-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பழனிசாமி  குடும்பத்தினர், அவரது உறவினர்களுடன்  சேலத்தில் உள்ள  மகள் வீட்டிற்கு வேனில் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறைக்கு இவரது மகள், பேத்தியுடன் அனைவரும் திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் சேலம்-கோவை தேசியநெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாரதவிதமாக வேன் மோதியது.

விபத்து நடந்த பகுதியை பார்வையிடும்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன்.
விபத்து நடந்த பகுதியை பார்வையிடும்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன்.

இதில் கருப்பண்ணன் மகன் பழனிசாமி (52), இவரது மனைவி பாப்பாத்தி (40), பாப்பாத்தியின் அண்ணன் முத்தான் மகன் ஆறுமுகம் (50), இவரது மனைவி மஞ்சுளா (21), இவர்களது உறவினர் செல்வராஜீ (55), பிரியா, ராஜதுரையின் மகள் சஞ்சனா(1) உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் பழனிசாமி-பாப்பாத்தி மகளும், ராஜதுரை மனைவி பிரியா (25), வேன் ஓட்டுநர் ஆறுமுகம் மகன் விக்னேஷ் (20) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் பி.சந்திரலேகா, சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் சி.ராஜா ஆகியோர்  மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம், வட்டாட்சியர் கே.அறிவுடைநம்பி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சங்ககிரி பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com