உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். 
Published on

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் இன்று(வியாழக்கிழமை) மனு அளித்துள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். 

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரியும்,

அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று பாஜக மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உதயநிதியின் பேச்சைக் கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்.11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com