
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள அரசு மணல் குவாரியில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல்லில் உள்ள ராமச்சந்திரனின் உறவினரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினம் வீடு, அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியிலும் சோதனை
திருச்சியில் உள்ள திருவானைக்காவல் கொள்ளிடம் பாலம் அருகே உள்ள, புதுக்கோட்டையை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...