
வாளையாறு சோதனைச் சாவடி
கோவை: கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தமிழக சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமாட்டக்கப்பட்டு 7 பஞ்சாயத்துகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் வாளையாறு சோதனைச் சாவடியில் மருத்துவத்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நிபா வைரஸ் எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி?
கேரளத்தில் இருந்து வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், பயணிகளின் விவரங்களையும் அலுவலர்கள் குறித்து வருகின்றனர்.
இதேபோல், அனைத்து தமிழக எல்லைப் பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்த தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...