மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்:  காஞ்சிபுரத்தில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப். 15) நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்:  காஞ்சிபுரத்தில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!


காஞ்சிபுரம்: தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப். 15) நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடங்கின. இதற்கான முதல் கட்ட முகாம் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன. மேலும், மூன்று நாள்கள் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை கடந்த சில நாள்களாக நடைபெற்றன. அவற்றில் தகுதியான விண்ணப்பதாரா்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டனா்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத் தெரிவித்து விண்ணப்பதாரா்களுக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் வரும் 18-ஆம் தேதிமுதல் தொடங்குகின்றன. மேலும், நிராகரிப்புக்கான காரணங்களை ஏற்க மறுத்து, விண்ணப்பதாரா்கள் மேல்முறையீடு செய்யலாம். கோட்டாட்சியரின் உரிய பரிசீலனைக்குப் பிறகு தகுதியுடைய விண்ணப்பமாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தின் சில மணி நேரங்களை உரிமைத் தொகை திட்டக் கண்காணிப்புக்காக செலவிட வேண்டுமென மாவட்ட நிா்வாகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். 

மகளிா் உரிமைத் தொகைத் திட்டமானது, முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கிவைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். 

அந்த அறிவிப்பின்படி, மகளிா் உரிமைத் திட்டத் தொடங்கி வைக்க வெள்ளிக்கிழமை  அண்ணா பிறந்த காஞ்சிபுரம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்திற்கு வந்த  முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கிவைத்தார்.  

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

சென்னையில் ராயப்பேட்டை, கொளத்தூா், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றும் வரும் நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் உதயநிதி, பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். 

இதேபோன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்.

முன்கூட்டியே பணம்: மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதி படைத்த பயனாளிகளில் சிலருக்கு வியாழக்கிழமையே அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இது அந்த பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் அனைத்துப் பயனாளிகளுக்கும் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com