நன்றி மீண்டும் வராதீர்கள்: பாஜகவுக்கு அதிமுக வெளியிட்ட பதிவு!

2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது.
நன்றி மீண்டும் வராதீர்கள்: பாஜகவுக்கு அதிமுக வெளியிட்ட பதிவு!

பாஜகவுடனான கூட்டணி முறிவு அறிவிப்பை நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்குடன் அதிமுக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை அதிமுக தொண்டர்களும் பாஜக எதிர்ப்பாளர்களும் அதிக பதிவுகளை வெளியிட்டு டிரெண்ட்டாக்கி வருகின்றனர். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

இது குறித்து அறிவித்த கே.பி. முனுசாமி, அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே, இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாகவும், இபிஎஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com