அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?

தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அறிஞர் அண்ணா / ஜெயலலிதா
அறிஞர் அண்ணா / ஜெயலலிதா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக இன்று மாலை (செப். 25) அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.   

தமிழ்நாட்டில் நிலைகொள்ள வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவுடன் பயணித்துவந்த பாஜகவின் பயணம் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதிமுக தலைமைச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது. 

இக்கூட்டத்தின் தொடக்கம்தான் பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு ஆரம்பமாய்  இருந்தது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் இறுதியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை என்று 3 முறைக்கூறி தனது முடிவை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். 

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார். பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

இதற்கெல்லாம் ஆரம்பமாய் இருந்தது என்ன என்று யோசித்தால், தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவரான அண்ணாதுரை, ஜெயலலலிதா குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகள்தான். அதற்காக அவர் வருத்தம்கூட தெரிவிக்காததுதான். 

கூட்டணி முறிவு: காரணங்கள்

வடக்கிலிருந்து வந்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலிருந்தே இரு கட்சிகளிடையேயும் சில முரண்கள் இருந்து வந்தன. கொள்கைகள் வேறுவேறாக இருந்தாலும் வாக்குகளுக்காக இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க ஆரம்பித்தன. ஆனால், தலைமையிலிருந்து கட்சியின் தொண்டர்கள் வரை இரு கட்சிகளிடையேயும் மோதல்போக்குகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. அதன் முடிவுதான் இன்றைய கூட்டணி முறிவு.

செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசிய அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து பேசியிருந்தார். 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். 

மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று அண்ணாவை எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் கூறியிருந்தார்.

இது திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் கொந்தளிக்கச் செய்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் அண்ணாமலையின் செயலுக்கு கடும் கண்டனங்களை வெளிப்படையாகத் தெரிவித்தனர். 

அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு, அண்ணா குறித்து தரக்குறைவாக பேசியவரின் நாக்கு துண்டாக்கப்படும் என்றார். இனி பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போதே தெரிவித்திருந்தார். 

இவ்வாறு அதிமுகவினர் கண்டனங்களைத் தெரிவித்தபோதும், அண்ணா குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என அண்ணாமலை அடாவடியாக இருந்தார். இது அதிமுகவினரை மேலும் காயப்படுத்தியது.

அண்ணா உருவாக்கிய திராவிடத்தின் பின்னணியில் எழுந்த அதிமுக தொண்டர்கள் அண்ணாமலையின் இந்த பேச்சால் கடும் அதிருப்தி அடைந்தனர். அதனை ஆங்காங்கே அதிமுக தொண்டர்களின் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) மூலம் காண முடிந்தது. 

அதிமுகவின் திராவிடத் தகுதியை பாஜக குலைத்துவிடும் என்ற அச்சம் அதிமுகவில் அனைத்துத் தரப்பிலும் எழுந்தது.

இதுமட்டுமின்றி இதற்கு முன்பு ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துகளும் அதிமுகவுக்கு ஏற்புடையதாக இல்லை.  

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த அண்ணாமலை, ஜெயலலிதா என்ற பெயரைக் குறிப்பிடாமல்,  1991-96 காலத்தில் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்றுகூட சொல்வேன் எனவும் தெரிவித்தார். 

அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவரான ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளும் இக்கூட்டணி முறிவுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. அப்போதே அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.  

கூட்டணி கடந்துவந்த பாதை

தமிழகத்தில் கூட்டணி வாயிலாக வாக்குகளைப் பெற பாஜகவுக்கு அதிமுக உதவியிருந்தாலும், சநாதனம், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இரு கட்சிகளுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இவை தமிழக மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இதில் அதிமுக 20 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் இக்கூட்டணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொடர்ந்தது. ஆனால், மக்கள் ஆதரவை இக்கூட்டணி பெறவில்லை. இதனால், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியால் பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டது. 

இந்த கட்டாயமும், பாஜக மாநில தலைவரின் அடுத்தடுத்த செயல்பாடுகளும் இப்போது கூட்டணி முறிவுக்கு வித்திட்டுள்ளன. 

தமிழகத்தில் தேர்தல் களத்தில் நுழைய பாஜகவுக்கு அதிமுக உதவியிருந்தாலும், இனி தனித்துவிடப்பட்ட நிலையில் பாஜக நிலைக்குமா?  நீர்த்துப் போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com