காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு இன்று நிறைவுபெற்ற நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/ உயர்மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 - 24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் இன்று நிறைவு பெற்றுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு செப்.19ஆம் தேதி  தொடங்கியது. இந்தத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது.

முன்னதாக செப்.15-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு தொடங்கி நடைபெற்று வந்தது. தோ்வுக்குப் பிறகு செப்.28 முதல் அக். 2-ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், 6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு மாறாக, இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 13ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டன.  கடந்த ஆண்டு 9 நாள்கள் வரை காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு தோ்வு கண்காணிப்பு, எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. உளவியல் ரீதியாக ஆசிரியா்களுக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும். எனவே, கடந்த ஆண்டைப்போல நிகழாண்டிலும் காலாண்டு தோ்வுக்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com