சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட.. ஆவின் அறிவுறுத்தல்

சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட.. ஆவின் அறிவுறுத்தல்

சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட ஆவின் அறிவுறுத்தியிருக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் கறவைகளை காத்திட பால் உற்பத்தியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆவின் நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தற்போதைய கோடைக்காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாகக் காணப்படுவதால் கறவைகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைந்து அவற்றின் பால் உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, கறவைகளின் உற்பத்தித் திறனை பாதுகாத்திட உரிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட கறவை மாடுகளை பகற்பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலும் அல்லது மரத்தடி நிழலில் இருக்குமாறு செய்ய வேண்டும்.

கறவைகள் தண்ணீர் அருந்தும் குடிநீர்த் தொட்டிகளை நிழலில் இருக்குமாறும் அதில் எப்பொழுதும் தூய்மையான தண்ணீர் குடிக்க கிடைக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அயற்சியின் சோர்வை போக்க தாது உப்புக் கலந்த தண்ணீரை கொடுப்பது நன்று.

நிறைமாத சினையாக உள்ள கறவைகளில் வெப்ப அயற்சியின் தாக்கத்தினால் தீவனம் உண்பதில் நாட்டம் குறையும். இதனால் கருவில் வளரும் கன்று வளர்ச்சிக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியமான கன்று ஈனுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோடைக்காலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி, அம்மை, அடைப்பான் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்குதலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய தடுப்பூசிகளை கறவை மாடுகளுக்கு போட வேண்டும்.

மேலும், கோடைக் காலத்தில் வறட்சி காரணமாக ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் ஊறுகாய் புல், உலர்புல் போன்ற பதப்படுத்திய பசுந்தீவனங்களை இருப்பில் வைத்து கறவை மாடுகளுக்கு அளிப்பது நன்று என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com