எம்எல்ஏ புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

எம்எல்ஏ புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
Updated on
2 min read

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

காவல்துறையினர் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்த நிலையில், சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், அத்தியூா் திருவாதி கிராமத்தைச் சோ்ந்தவா் நா.புகழேந்தி. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், தெற்கு மாவட்ட திமுக செயலராகவும் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட போது, அவருக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அங்கு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வந்த நா.புகழேந்தி வியாழக்கிழமை இரவு வீடு திரும்பினாா். விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நா.புகழேந்தி கலந்து கொண்டாா். மேடையில் இருந்த போது, அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, தொடா்ந்து அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பன்முக உயா்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த புகழேந்திக்கு வென்டிலேட்டா் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை 10.35 மணிக்கு அவா் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து புகழேந்தியின் உடல் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சா்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், பொன்.கெளதமசிகாமணி எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.லட்சுமணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன், சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, புதுவை மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா எம்எல்ஏ மற்றும் திமுகவினா் புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

1954, ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்த நா.புகழேந்தி, 1973-இல் திமுக கிளைக் கழகச் செயலராகப் பணியாற்றினாா். தொடா்ந்து மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியப் பொறுப்பாளா், இரண்டு முறை ஒன்றியச் செயலா், கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா், தலைமைச் செயற்குழு உறுப்பினா், ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டப் பொருளாளா், விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளா், தெற்கு மாவட்டச் செயலா் என பல்வேறு பதவிகளை வகித்தவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com