ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் வரும்போதெல்லாம் நான் தமிழக மக்களை நேசிக்கிறேன். நெஞ்சம் நிறைந்த அன்போடு உங்களை நேசிக்கிறேன். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு கலாசாரம் மொழி மிக மிக ஈர்த்த ஒன்று இந்தியா பிரதிபலிக்கும் கண்ணாடியாக தமிழகத்தை நான் பார்க்கிறேன் நீங்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் போன்ற தலைவர்களை தந்துள்ளீர்கள் சமூக நீதி பாதையில் எப்படி நடப்பது என்பதை நாட்டிற்கு தமிழக மக்கள் தான் தெரியபடுத்தியுள்ளனர். எனவே தான் பாரத் ஜோடா யாத்திரையை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கிமீ தூரம் நடந்து இந்த மாபெரும் தத்துவத்தை மக்களிடம் சொல்வதற்காக நடந்தோம்.

இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தில் இருந்து தான் நிறைய செய்திகள் பண்பாட்டு தரவுகளை படிக்க முடியும். தமிழக மக்களிடம் நான் கொண்டிருக்கும் உறவு அரசியல் உறவு இல்லை குடும்ப உறவு ஆத்மாத்மமாக நேசிக்கும் உறவு. இன்று இந்தியாவில் மிகப்பெரிய தத்துவ போர் நடக்கிறது. ஒருபுறம் தந்தை பெரியார் போதிக்கும் சமூகநீதி சமத்துவம் விடுதலை மறுபுறம் மோடி பரப்பும் வெறுப்பு. மோடி சொல்கிறார் ஒரே நாடு ஒரே தலைவர் ஒரே மொழி என்கிறார். இந்தியாவில் இருக்கும் எந்த மொழியும் தமிழ் மொழியை விட எந்தவிதத்திலும் குறைந்த மொழி இல்லை. இந்த நாட்டில் பலவேறு மொழிகள் பல்வேறு பண்பாடு பல்வேறு கலாச்சாரம் இருக்கிறது. ஒரு பண்பாட்டை விடவோ ஒரு மொழியை விடவோ மற்ற மொழி எந்த விதத்திலும் தாழ்ந்த இல்லை. தமிழ் ஒரு மொழி அல்ல ஒவ்வொருவரும் படிக்கும் வாழ்க்கை முறை. தமிழ் மொழி மீது தொடுக்கும் எந்த ஒரு தாக்குதலும் தமிழர் மீது தொடுக்கும் தாக்குதலாகவே பார்க்கிறேன். இந்தியாவின் தமிழ் அல்லாமல் வங்க மொழி அல்லாமல் பேசப்படுகிற மொழி அல்லாமல் இந்தியா என்ற நாடே இருக்க முடியாது.

இந்தியாவில் உள்ள எல்லா மொழி கலாசாரம் பண்பாட்டை மிக புனிதமானது என கருதுகிறோம். ஆனால் அவர் ( மோடி) ஒரே நாடு ஒரே தலைவர் ஒரே மொழி என்ற குறிக்கோளோடு இருக்கிறார்கள். இதனுடைய முடிவு நாட்டில் இருக்கிற இளைஞர்களில் 83% இளைஞர் வேலையில்லாமல் திண்டாட்டத்தை சந்திக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தை விட இப்போது சமச்சீரற்ற இந்தியா இருக்கிறது. இந்த நாட்டில் 25 பெரிய பணக்காரர்கள் 70% செல்வத்தை தங்கள் கைவசம் வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமர் அவர்களின் கடனை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. ஆனால் பெரிய பணக்கார்ர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். அரசு வழங்கும் அனைத்து வசதிகளும் அவர்கள் மட்டும் அனுபவித்து வருகிறார்கள். அனைத்து விமான நிலையங்கள் அனைத்து மின்சார வசதிகள் ஒரே தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில் ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் மிகவும் சீரழிந்துள்ளது. இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் அனைத்து முகமைகளும் ஆர்எஸ்எஸ் சார்ந்த மக்களால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. நாட்டின் வருவாய் புலனாய்வுதுறை, சிபிஐ எல்லாம் ஒன்றி அரசு கையில் எதிரிகளை அழிக்கும் ஆயுதமாக பயன்படுத்தபடுகிறது. தேர்தல் ஆணையரை பிரதமர் தான் தேர்ந்தெடுக்கிறார். முதல்வர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தமிழகத்துக்கு எப்போதும் வெள்ள நிவாரண பணத்தை கொடுக்க மறுக்கிறார்கள். தமிழக மீனவர்கள் உதவி கேட்ட போது ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. தமிரக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது எதுவும் கிடைக்கவில்லை. உலகமெல்லாம் ஒரு நாள் இந்தியா ஜனநாயகத்தின் தாய் என போற்றிய காலம் மாறிவிட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி என்ன சொல்ல ஆசைப்படுகிறது என்றால் இந்தியாவில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க நாங்கள் மனதார நினைத்துள்ளோம்.

இன்று ஒன்றிய அரசில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. நாங்கள் ஆட்சி வந்தால் அதை உடனே நிரப்புவோம். வேலை கிடைக்கும் முன் இளைஞர்களுக்கு வேலை பயிற்சி வாய்ப்பு அளிக்கும் ஒரு திட்டத்தைட உருவாக்கி வைத்துள்ளோம். ஒரு ஆறு மாதம் அல்ல ஒரு ஒரு ஆண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பயிற்சி கொடுத்து நல்ல வேலை கிடைக்க ஏற்பாடு செய்வோம். இதே போன்று டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்க தனி சட்டம் இயற்றி வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் என்ற திட்டத்தை கொண்டு வருவோம். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞர், இளம்பெண் தனியார் அல்லது பொதுத்துறை அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி காலத்தில் அரசு ஒரு லட்சம் பணம் வழங்கும். அதில் சிறப்பு தேர்ச்சி பெற்றால் அதே வேலையில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கையில் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். தமிழக மக்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பிரச்னை. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை நீ்ட் தேர்வை மாநில அரசு முடிவுக்கு விடுவதாக இருக்கிறோம். மாநில அரசு விரும்பினால் வைத்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் விட்டு விடலாம். தமிழக மக்கள் தங்கள் கல்வி திறன் எப்படி இருக்க வேண்டுமென அவர்களே முடிவு செய்வார்கள். நீட் தேர்வு என்பது ஏழை மக்களுக்கு எதிரானது எனவே அந்த முடிவு நீங்கள் எடுத்து கொள்வதை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்று கொள்கிறோம். இந்திய விவசாயிகளுக்கு நான் உறுதி கூறுகிறேன். அவர்கள் விளைவிக்கும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு கடன் நிவாரணம் அளித்துள்ளார்.

ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார். தமிழக பெண்களும் சரி இந்திய பெண்களும் சரி அவர்கள் தான் இந்த தேசத்தை பார்த்துக் கொள்கிறார்கள். இதுபோன்று பணி செய்யும் பெண்களுக்கு நாம் சரியான முறையில் நியாயம் வழங்கவில்லை. ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமை பெண்களுக்கு இல்லை, அதற்காகவே பெண்களுக்கு என்று ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்தியாவில் வறுமையில் இருக்கும் அத்தனை குடும்ப பெண்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அரசு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும். இதன் மூலம் இந்தியாவில் ஒரு ஏழை குடும்பம் மாதம் 8000 ரூபாயும் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சமேக பெறுவார்கள். இந்தியாவை வறுமையில் இருந்து நிரந்தரமாக அழிக்க முடிவு எடுத்துள்ளோம்.

அரசு வேலையில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே அமல்படுத்துவோம். இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் ஆஷா திட்டம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியம் 2 மடங்கு உயர்த்தப்படும். பிரதமர் மோடி தேசத்தின் மீனவர்களை முழுமையாக மறந்து விட்டார். மீனவர்கள் பேராபத்துடன் கடலுக்குள் சென்று நமக்கு உணவு தருகிறார்கள். எனவே அவர்களுக்கென்று நாங்கள் தனி தேர்தல் அறிக்கை தந்துள்ளோம். அவர்களின் படகுக்கு டீசல் மானியம் தர போகிறோம். படகுக்கு காப்பீடு, அவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க இருக்கிறோம். உள்நாட்டு மீன் தொழிலை விவசாயத்தைப் போல கருதுகிறோம். நான் ஏற்கெனவே சொன்னது போல் இது ஒரு மாபெரும் தத்துவ போர்.

இந்தியாவின் கலாசாரம் மொழி பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிரான போர், இந்த தேர்தல், நான் எப்போதும் உங்களோடு உங்கள் பண்பாட்டோடு உங்கள் கலாசாரத்தோடு என்றும் இருப்பேன். உங்களுக்கு ஒரு உறுதியை சொல்கிறேன். மோடி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு சக்தியும் தமிழகத்தின் பண்பாட்டை மொழியை கலாசாரத்தை தொட்டு பார்க்க முடியாது. இந்த தத்துவ போர் நாட்டின் ஜனநாயகத்தை அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாம் மேற்கொள்ளும் யுத்தம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com