மதுரை எய்ம்ஸ் 2026-ல் செயல்பாட்டுக்கு வருவது உறுதி: அண்ணாமலை

மதுரை எய்ம்ஸ் 2026-ல் செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

மதுரை எய்ம்ஸ் 2026-ல் செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

இத்தனை ஆண்டுகளாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திற்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

சிறிய கடைகளில் வேலைக்குச் சேரக் கூட, கணக்கு என்ற அடிப்படைத் தகுதி தேவைப்படும் நிலையில், கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் அமைச்சரான முதலமைச்சரின் மகன் உதயநிதி, மத்திய அரசு ரூ.1.7 லட்சம் கோடிதான் தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது, 29 பைசா தான் கொடுக்கிறது என்று ஊர் ஊராகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின், 5.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது என்று கூறுகிறார்.

குடும்பத்துக்குள் பேசி ஒரு முடிவுக்கு முதலில் வாருங்கள். உங்கள் பொய்க் கதைகளை மக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் இவற்றை எல்லாம் மேம்படுத்தச் செலவிடப்பட்ட நிதி மற்றும் தமிழகத்தில் செயல்படும் திட்டங்களுக்கான மானியம் ஆகியவையை எந்தக் கணக்கில் வைப்பீர்கள் ஸ்டாலின் அவர்களே? திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா? அதுமட்டுமின்றி, மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் கொள்ளையடித்த ரூ.30,000 கோடி எந்தக் கணக்கில் வரும்? அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

மத்திய அரசு பெறும் வரிப்பணத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் நிதி, அதுபோக, நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திட்டங்கள் என ஏராளமாக கணக்கு சொல்ல முடியும். நீங்கள் பெறும் வரிப்பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா? டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக, ஜிஎஸ்டியில் சுமார் 70% நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வரும் வருமானம் இத்தனை இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசுப் பணியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், சிறுகுறு தொழில்முனைவோர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே ஏன்? ஆனால், தமிழக அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்களே, எப்படி? தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது? பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்த, பத்து லட்சம் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் கடந்த 18 மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது கூடத் தெரியாமல், முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.

அண்ணாமலை (கோப்புப்படம்)
2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது என்பதை முதலமைச்சர் மக்களுக்குச் சொல்லத் தயாரா? மதுரை எய்ம்ஸ் கல்லூரிக் கட்டிடங்கள், 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பலமுறை அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் மதுரை எய்ம்ஸ் என்று உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? மதுரை எய்ம்ஸ் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருவது உறுதி என்பது மக்களுக்குத் தெரியும். அது மோடியின் கேரண்டி.

ஆனால், நீங்கள் தருவதாகச் சொன்ன விடியல் எப்போது வரும் என்பதே மக்களின் கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com