பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

தி.மு.க.வைப் பார்த்து 100 கேள்விகள் கேட்கும் பாஜகவின் செயல் அனைத்தும் பித்தலாட்டம் என திமுக விமர்சித்துள்ளது.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

தி.மு.க.வைப் பார்த்து 100 கேள்விகள் கேட்கும் பாஜகவின் செயல் அனைத்தும் பித்தலாட்டம் என திமுக விமர்சித்துள்ளது.

தி.மு.க.வின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. பத்திரிகை விளம்பரங்களின் மூலம் இன்று 100 கேள்விகளை எழுப்பியது. இதில், 43 வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையை இப்பொழுதாவது படித்தீர்களே. அதற்காக உங்களுக்கு எங்கள் நன்றி.

2021 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. மக்களுக்குத் தந்த வாக்குறுதிகள் 505. இவற்றில் உங்கள் கணக்குப்படி 43 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை; வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம்.

தி.மு.க. அளித்த வாக்குறுதி 505-ல் இந்த 43 தவிர உங்கள் கணக்குப்படி எஞ்சியவைகள் 462 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன அல்லவா?

ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும் என்பதால், தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டுகளில் முடிந்திருப்பது 3 ஆண்டுகள்.

எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் மிச்சமுள்ள 43 கோரிக்கைகளையும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நிறைவேற்றி முடித்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உண்மையான அரசியல் நடத்தும் கட்சிகள் அனைத்திற்கும் நன்றாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாது. காரணம் நீங்கள் நடத்துவது உண்மையான அரசியல் அல்ல.

வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற பிறகு அதனை நிறைவேற்றுவதை சொல்லிக்கொடுத்த கட்சி திமுக.

நீங்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகளைக் கூறி 100 முறை கேட்டோமே! அதற்காக ஒரு முறையாவது பதில் சொன்னீர்களா ?

சென்னை, தூத்துக்குடி பகுதிகளில் பெய்த புயல் மழை வெள்ளத்தால் உயிர் உடைமைகளை இழந்து நின்ற மக்களுக்காக நிவாரணம் வழங்கிட எத்தனை முறை கோரிக்கைகள் வைத்தோம். ஒரு பைசாவைக் கூட நிவாரணமாக வழங்கிட வில்லையே !

குஜராத்தில் மழை என்றதும் 1,000 கோடி ரூபாயை அள்ளிக் கொண்டுபோய் அவர்கள் கேட்காமலேயே உடனே எடுத்துச் சென்று கொடுத்தீர்களே !

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா ? வெளிநாட்டில் உள்ளதா ? தமிழ்நாட்டிற்கு ஏன் நிவாரண உதவி வழங்கவில்லை.

100க்கு 100 பொய்யான கேள்விகளை தொடுத்து பொது மக்களை திசை திருப்பும் பா.ஜ.க.வின் மாயாஜாலம் வித்தைகள் இனி எதுவும் எடுபடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com