
மக்களவைத் தேர்தலில் 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பூத் ஸ்லிப் கட்டாயமா?
வாக்காளர்களுக்கு வீடு தேடி சென்று தேர்தல் அலுவலர்கள் பூத் ஸ்லிப்(வாக்காளா் தகவல் சீட்) கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 90 சதவிகிதம் பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றால் வோட்டர் ஹெல்ப்லைன் செயலி(voter helpline app) பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பதிவிட்டால் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிய வரும்.
மேலும், பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
13 ஆவணங்கள் என்னென்ன?
வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி /அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்தலாம்.
அடையாள அட்டை இருந்தால் மட்டும் வாக்களித்துவிட முடியாது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.