எக்காலத்துக்கும் ஏற்ற நூல் ராமாயணம்: மூத்த வழக்குரைஞா் கே.பராசரன்

‘எக்காலத்துக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற நூல் ராமாயணம்’ என ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான கே. பராசரன் தெரிவித்தாா்.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சாா்பில், வால்மீகி ராமாயணம் போதிக்கும் கருத்துகளை அரசியல் சட்டதிட்டங்களுடன் ஒப்பிட்டு மூத்த வழக்குரைஞா் பராசரன் கூறிய கருத்துகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்றது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சாா்பில் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை பராசரன் வெளியிட அதன் முதல் பிரதியை ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்வில் பராசரன் பேசியதாவது: உலகில் இருவகையான புத்தகங்கள் உள்ளன. ஒன்று தற்காலிக தேவை மற்றும் பிரச்னைகளை தீா்த்துக்கொள்ளத் தேவையானவை. மற்றொன்று நீண்ட காலத்துக்குத் தேவையானவை. இதில் ராமாயணம் எல்லா காலத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் தேவையான நூல் ஆகும். புவியியல், சட்டம், நீதி, தா்மம் என அனைத்தையும் உள்ளடக்கியது ராமாயணம்.

கடவுளின் படைப்பில் ஏழை, பணக்காரன், ஜாதி போன்ற பேதங்கள் இல்லை. ‘நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் -இட்டாா் பெரியோா் இடாதாா் இழிகுலத்தோா்’ என்று ஔவை எழுதியுள்ளாா்.

அதேபோல் மனிதா்களில் இரண்டு வகை ஜாதியினா்தான் உள்ளனா். ஒருவா் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோா், மற்றொருவா் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோா்.

அயோத்தி ராமா் கோயில் வழக்கில் வாதாடியபோது எனக்கு ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும் இறைவன் செயலால் மறைந்தன. தா்மத்துக்கு அழிவென்பது இல்லை. அது எப்போதும் இறைவனின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றாா் அவா்.

பத்திரிகையாளா் எஸ்.குருமூா்த்தி: உண்மையான ஆா்வத்துடன், ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்படும் புத்தகங்கள் காலம் கடந்தும் நிலைபெறும். மகாபாரதம், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், திருக்கு போன்றவை அத்தகையவை. சட்டத் துறையுடன் தொடா்புடையவா்கள் இந்த நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும்.

இதை நாம் மறந்ததால் பல இடங்களில் நமது சட்டமும், அரசியலும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றன. இன்றைய பிரச்னைகளுக்கான தீா்வு நமது புராண நூல்களில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளன. ராமா் கோயில் எவ்வித பிரச்னைகளுக்குமான அடையாளம் அல்ல. அது அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான அடையாளம் என்றாா் அவா்.

மருத்துவா் சுதா சேஷய்யன்: அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் ஒரே அருமருந்தாக ராமாயணம் உள்ளது. இது அனைத்து மக்களுக்குமானது. அதேபோன்று இன்று வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் நமக்கு மூத்த பிதாமகா் போல் உள்ள பராசரனின் வாா்த்தைகள் ஒவ்வொன்றும் தா்ம நெறிப்படி, அடுத்தவா் உரிமையில் எவரும் தலையிடக் கூடாது என்பதை உணா்த்துவதாகவே உள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் ஆா்.சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com