வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று(ஏப். 24) அதிகாலை ஆம்னி பேருந்து, சுற்றுலா வேன், லாரி ஆகிய 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், வேன் டிரைவர், பயணிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். 30 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, இன்று புதன்கிழமை அதிகாலை 2:45 மணி அளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஊட்டியில் இருந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது அவ்வழியாக வந்த லாரியும் இந்த வாகனங்களுடன் மோதியது.
இந்த விபத்தில் சுற்றுலா வேன் டிரைவர் அன்பழகன்(39) மற்றும் பயணிகள் வாஞ்சிநாதன்(39), ராஜா (39) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
ஆம்னி பேருந்து, வேனில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு மற்றும போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.