அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இதன்பிறகு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதனிடையே நேற்று(ஏப். 23) மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை படிப்படியாக கிரிவலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுவை மாநிலங்களைத் தவிர வெளிநாடுகள், வட மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பேர் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலால் இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தது.
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தபோதிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருவண்ணமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கடும் வெயிலுக்கு மத்தியில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் முதியோர், பெண்கள் குழந்தைகள் என கடுமையாக அவதியுற்றனர்.