நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தண்டனை விவரத்தை அறிவித்தார்.
நிர்மலா தேவி
நிர்மலா தேவிகோப்புப் படம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தண்டனை விவரத்தை அறிவித்தார்.

நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. 2018 முதல் நிர்மலா தேவி சிறையில் இருந்து வருவதால், அந்த ஆண்டுகள் தவிர்த்து, மீதமுள்ள ஆண்டுகள் சிறையில் இருப்பார் எனத் தெரிகிறது.

இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து, நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

நிர்மலா தேவி
பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

வழக்குப் பின்னணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்ததாக, செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் 26ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராகாத்ததால் தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com