
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மழை வேண்டி முன்னோர்கள் வழக்கப்படி மாயவன், கன்னிமார், கருப்பனார் எல்லைச்சாமிகளுக்கு, ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி பூஜை செய்தும், 'எல்லைப்பன்றி' பலியிட்டு விருந்து வைத்தும் இன்று நூதன வழிபாடு நடத்தினர்.
வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால், வறட்சி தலை துாக்கியுள்ளது. நீர்நிலைகள் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால், பயிர் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல கிராமங்களில் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாழப்பாடியில் மழை வேண்டி முன்னோர்கள் வழக்கப்படி, மாயவன், கன்னிமார், கருப்பனார் எல்லைச்சாமிகளுக்கு பூஜை செய்தும், 'எல்லைப்பன்றி' பலியிட்டு விருந்து வைத்தும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை வாழப்பாடி பாப்பான் ஏரிக்கு தண்ணீர் வரும் முத்தம்பட்டி அணைக்கட்டு அருகிலுள்ள 400 ஆண்டு பழமையான எல்லைச்சாமி மாயவனுக்கு பாரம்பரிய முறைப்படி பொட்டுக்கடலை, வெல்லம், அவுல் படையல் வைத்து மழை வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பாப்பான் ஏரிக்கரையிலுள்ள பெண் காவல் தெய்வங்களான கன்னிமார் சாமிகளுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
இதனையடுத்து, வாழப்பாடி அக்ரஹாரம் சந்தைப்பேட்டையில் ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி இருந்து மேள வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க, சுவாமிக்கு நேர்ந்து விட்ட பன்றியை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு காளியம்மன் நகர் பாப்பான் ஏரிக்கரையில் உள்ள எல்லைச்சாமி கருப்பனார் கோவிலுக்கு கால்நடையாக கொண்டு சென்றனர்.
எல்லைக் கருப்பனார் சுவாமிக்கு பன்றியை பலியிட்டு, வறட்சி நீங்க மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். இந்தப் பன்றிக்கறி சமைத்து, ஏரிக்கரையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆண்களுக்கு மட்டும் விருந்து வைக்க உள்ளனர்.
இதுகுறித்து அல்ல. வாழப்பாடி கரக்காரர் பெ. ஞானசூரியன் கூறியதாவது :
வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக போதிய மழையில்லாததால் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. பயிர் செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மழை வேண்டி முன்னோர்கள் வழக்கப்படி, ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி, இன்று காலை எல்லைச்சாமிகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினோம். இன்று மாலை ஏரிக்கரை எல்லைக் கருப்பனாருக்கு பன்றி பலி கொடுத்து, பன்றிக்கறியை சமைத்து ஆண்களுக்கு மட்டும் விருந்து வைக்க உள்ளோம். இதனால் ஓரிரு நாள்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வறட்சி நீங்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
படவிளக்கம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மழை வேண்டி எல்லைக்காக்கும் அணைக்கட்டு மாயவனுக்கு நடைபெற்ற பூஜை.