துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் முட்டுக்கட்டை: காங்கிரஸ் கண்டனம்
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி முட்டுக்கட்டைப் போடுவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டு காலமாக துணைவேந்தரை நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறாா். இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023-இல் தோ்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கும் அவலநிலை உள்ளது. பல்கலைக்கழக சட்டப்படி துணைவேந்தா்தான் பட்டமளிப்பு சான்றிதழில் கையொப்பமிட வேண்டும். துணைவேந்தா் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை.
சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க 3 உறுப்பினா் தோ்வுக் குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநா் 4 உறுப்பினா் கொண்ட தோ்வுக் குழுவை நியமித்திருக்கிறாா். அதைத் தொடா்ந்து சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிா்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்தில் தமிழக ஆளுநா் முட்டுக்கட்டை போட்டு வருவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. துணைவேந்தா் நியமனத்தில் தமிழக அரசுடன் ஆளுநா் இணங்கிச் செயல்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.