
கட்சித் தலைவர்களைப் பற்றி விமரிசிக்கும்போது வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைப்பதாக, முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை நாசூக்காக அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சித்துப் பேசியிருந்தார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நாசூக்காகவே பேசியிருந்தார்.
இன்னொரு தலைவரின் சொற்பொழிவுக்கு நான் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அவரவர்களுக்கு என்று ஒரு பாணி இருக்கும். அவர் பேசிய மேடையில் நான் இருந்தேன், கட்சியிலும் நான்தான் இருக்கேன். ஆனால், அவ்வாறு ஒருமையில் பேசுவது பற்றி கட்சித் தலைவரிடமே கேட்டுக்கொள்ளலாம்.
ஆனால், என்னைப் பொறுத்தமட்டில், நான் என்ன பேசினேன் என்றால் சொல்லலாம். ஆனால், கட்சித்தலைவர் என்ன சொன்னார் என்று கேட்டால், அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும். இது அவரது பாணி. அவ்வளவுதான்.
தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். ஒரு மாநில தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அந்த மரியாதையை எதிர்க்கட்சித் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். மாநில தலைவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்றால் அது அவரது பாணி என்று கடந்து சென்றுவிடுவேன். மற்ற தவைர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணாமலை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தற்கு கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், கூவத்தூரில் நடந்தது அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நிகழ்வா? அங்கு நடந்தது ஒரு அலங்கோலம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடத்திய ஒரு கட்சி, திமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்த கட்சி, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள். டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள்.
எந்த எம்எல்ஏவுக்கு மாதாமாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான் தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று அண்ணாமலையும் பதிலுக்கு பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், பச்சை மை-யில் பத்து ஆண்டுகள் கையெழுத்துப் போட்ட, விவசாயியின் மகனை இந்த அண்ணாமலையைப் பற்றி பேச பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அண்ணாமலை விமரிசித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.