வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வருகின்ற நிலையில், நேற்றிரவு வானம் சற்று மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. இதையடுத்து இன்று காலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானம் மேகமூட்டத்துடனும் லேசான மழையும் பெய்து மனதுக்கு இதமான காலநிலையும் நிலவியது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒடிசா, ஆந்திர கரையோரம் அதற்கடுத்த 2 நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.