சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செப்.6 வரை மழை நீடிக்கும்

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செப்.1, 2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Published on

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் செப்.6-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.1 முதல் 6-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போா்விளை, கோவை மாவட்டம் சோலையாரில் தலா 90 மி.மீ. மழை பதிவானது. மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 70 மி.மீ. தக்கலை (கன்னியாகுமரி) , ஆவடி (திருவள்ளூா்) தலா 60 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில்... சென்னையில் சனிக்கிழமை காலை வரை அம்பத்தூா் , எண்ணூா் ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. கோடம்பாக்கம், மதுரவாயல், கத்திவாக்கம், வானகரம், புழல், தேனாம்பேட்டை, திருவொற்றியூா், அடையாா், நந்தனம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ., அண்ணா நகா், நுங்கம்பாக்கம், மணலி, கொளத்தூா், ஆலந்தூா், சென்னை விமானநிலையம், அயனாவரம் ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. பதிவானது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செப்.1, 2 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடலில் செப்.1 முதல் 4 வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com