
ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த,
ராஜ்குமார்,
அவரது மனைவி மீனா,
மகன் கௌதம்,
உறவினர்கள் மகா,
இனியா,
விநோதினி,
ரம்யா உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.
இந்த நிலையில், இரவு நிலவரப்படி மேற்கண்ட 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 3 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாறை விழுந்ததில் உடல்கள் நசுங்கியிருப்பதாகவும், அவை சிதைந்த நிலையில் மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 24 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்த மீட்புப்பணி நிறைவடைந்தது.