செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை: சட்ட அமைச்சர் ரகுபதி

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு ரகுபதி அளித்த விளக்கம்..
அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதன்கிழமை தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் கிடைத்தவுடன் அமைச்சராகிவிட்டீா்கள், வழக்கில் சம்மந்தப்பட்டவா் அமைச்சரானால், வழக்கின் சாட்சிகள் பயப்படுவாா்கள் என்று மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளதால், செந்தில் பாலாஜி தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்ததாவது:

“செந்தில்பாலாஜி அமைச்சர் பொறுப்பேற்றது பற்றி நீதிமன்றத்தின் கருத்து குறித்து கேட்கிறீர்கள். ஒருவரை அமைச்சராக்குவது, நீக்குவது முதல்வரின் முழு உரிமை. அவசரமாக அமைச்சர் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை.

கைது செய்யப்படும்போதும் அவர் அமைச்சர்தான், சிறையில் இருக்கும் காலத்தில் அமைச்சராகத்தான் இருந்தார். இப்போது வெளியே வந்த பிறகு அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் பேசியதாவது:

“சென்னையில் மழை நின்ற 5, 6 மணி நேரங்களில், தேங்கிய மழை நீரை முழுமையாக அகற்றி இயல்பு நிலை திரும்பச் செய்திருக்கிறோம். 

சாத்தனூர் அணை முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு படிப்படியாகத்தான் திறக்கப்பட்டது. அதிக மழை பெய்ததால், தென்பெண்ணையாற்றில் மிக அதிக தண்ணீர் வந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டபோது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல, நேரிடாமல் கவனமாக செயல்பட்டிருக்கிறோம்.

ரூ. 2 ஆயிரம் குறைவு எனப் பலரும் கூறுகிறார்கள். நிவாரண உதவிப் பொருள்களை கூடுதலாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதுபோன்ற பேரிடர்களில் மத்திய அரசு இதுவரை நமக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யவில்லை. இந்த முறை வேண்டிய உதவிகளை அவர்கள் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. பொருந்திருந்து பார்ப்போம்.

எல்லாவற்றுக்கும் காவி நிறம் பூச வேண்டாம் என விஜய் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு தனது பணியைச் செய்யாவிட்டால் அவர்களைத்தானே குறை சொல்ல முடியும், வேறு யாரைச் சொல்வது. மத்திய அரசின் அடையாளம்தானே காவி நிறம்?

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு, திமுக கொடுத்த அழுத்தம்தான் என அன்புமணி ராமதாஸ் கருத்து சொல்லியிருக்கிறார். திருமாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை திமுகவுக்கு இல்லை.

அவராக முடிவெடுத்து இருக்கிறார். இதில் அன்புமணிக்கு என்ன கவலை?” என்றார் ரகுபதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com