

ஐந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை "இரையா' என்று பார்க்கும்! அல்லது "இணைவிழைச்சுக்கு அல்லது சேர்க்கைக்கு உதவுமா' என்று பார்க்கும்!
இரண்டுக்கும் உதவாதென்றால் அவற்றின் மீது அதற்கு எந்த அக்கறையுமில்லை! தன்னைவிட வலியது என்றால் ஒதுங்கும்; எளியது என்றால் ஒடுக்கும்!
அவற்றை எவனும் வளர்ப்பதில்லை; தன்னை வளர்க்க வேண்டும் என்று எந்த விலங்கும் எதிர்பார்ப்பதுமில்லை! அவற்றிற்குப் புதிதாய் எதையும் கற்பிப்பாருமில்லை; அவை கற்றல் திறனுடையவையும் இல்லை! இரை, இணை விழைச்சு, உயிரச்சம் என்பவையோடு அவற்றின் வாழ்வு முடிந்து விடுகிறது!
பிற உயிரினங்களோடு ஒப்பிட்டால், மனிதன் வலிமையில் குறைந்தவன்! கையைப் பயன்படுத்துவதும், ஆறாவது அறிவைப் பெற்றிருப்பதும் இவனுக்குள்ள கூடுதல் தகுதிகள்!
கைகள் பயன்பட்டமையால் கருவிகளைப் படைக்கவும் ஆளவும் முடிந்தது. அதனால் அளப்பரிய வலிமை பெற்றான்! ஆறாவது அறிவு இயந்திர மனிதனைப் படைக்கும் அளவு பெருக்கமுற்றது!
எந்த உயிரினமும் தன் சொந்த இனத்தோடு மோதுவதுமில்லை; அதை அழிப்பதும் இல்லை! மனிதன் மட்டுமே தன் சொந்த இனத்தையே அழிக்கின்றவன்! கையையும், ஆறாவது அறிவையும் அவன் பயன்படுத்தி நாசமாக்கியவை எண்ணிலடங்கா!
வலிமையே தருமம் என்றான்! அந்தப் போக்கு துரியோதனனிடம் இருந்தது; இராவணனிடம் இருந்தது! அவர்களின் அழிவிலிருந்து பாடம் கற்கத் தெரிந்தவனில்லை இவன்! ஆகவே எவ்வளவு வளர்ச்சியிலும் போதாமை உடையவன் இவன்! அழிவே இவன் வாழ்க்கை முறை!
இவ்வளவு சிறிய நாட்டில் இவ்வளவு கனிம வளங்களா? அடித்துப் பிடுங்குவேன் என்று ரஷியா புறப்படுகிறது; அது போராக வெடிக்கிறது.
வெனிசுலாவில் இவ்வளவு எண்ணெய் வளமா? அதன் அதிபர் மனைவியோடு கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில்! அவர்களை ஒரே அறையில் வைத்தால், குடும்பமாவது நடத்திக் கொண்டிருப்பார்கள்!
இவ்வளவு வளமான திபெத் தனி நாடா? அதை ஒரு சாமியார் ஆள்வதா? மாவோ விடுவாரா? சாமியார் இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டார்! திபெத் சீனாவில் இணைக்கப்பட்டது!
அடித்து பிடுங்குதல், வழிப்பறி செய்தல்-இவை தனி மனிதக் கேடுகள் என்னும் நிலையோடு, அவை வல்லரசுகளின் வழிமுறைகளாகவும் ஆகிவிட்டன; வல்லரசுகளின் தலைவர்களெல்லாம் ஆறலை கள்வர்களாகவும், வழிப்பறி செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்!
ஒருவன் கத்தி வைத்திருக்கிறான்! பட்டப் பகலில் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுகிறான்! தெருக்காரர்கள் முழுவதும் திகைத்துப் பார்வையாளராகி விடுகின்றனர்! நம்முடைய ஐ.நா. சபை போல!
வல்லான் வகுத்ததே வாய்க்கால்! தனி மனிதனிலிருந்து ஆட்சியாளர்கள் வரை, இதுவே உலகின் நெறிமுறை ஆகி விட்டது!
இராவணன் காலத்திலிருந்து டிரம்ப் காலம் வரை எந்த மாற்றமுமில்லை! விலங்குகள் மந்தைகளில் வாழ்வதுபோல, மனிதனும் மந்தையாகக் கூட்டமாகத்தான் வாழ்கிறான்! மந்தை என்பது அசிங்கமாக இருக்கிறது என்று இவனாகவே அதைச் சமூகம் என்று சொல்லிக் கொண்டான்!
விலங்குகள் பிற இனங்களிலிருந்து பாதுகாப்புக்காக மந்தைகளாகின்றன. அவற்றிற்குத் தன் மந்தைக்குள் எந்தச் சிக்கலுமில்லை! ஆனால், மனித மந்தை உட்சிக்கல் உடையது!
ஆகவே சட்டங்கள் தேவைப்பட்டன! அவற்றை வரையறைப்படுத்த ஆட்சிகள் தேவைப்பட்டன! இவற்றை நிருவகிக்கநிருவாக எந்திரம் தேவைப்பட்டது! அதிகார வர்க்கம் உருவானது! அதனால் அரசைப் பராமரிக்க வரி விதித்தல் தேவையானது!
அரசனை உருவாக்கிக் கொண்டோம்; அவன் முதலில் அரண்மனையை உருவாக்கிக் கொண்டான்! பிறகு அவனுடைய காதலி இறந்து விட்ட துயரம் தாங்காமல் மக்களின் வரிப் பணத்திலிருந்து ஒரு சமாதி கட்டினான்; பளிங்குக் கற்களால் கட்டினான்! ஆக்ராவில் ஆற்றோட்டப் பின்புலத்தில் நிலவொளியில் தகத்தகாயமாக மின்னுமாறு கட்டினான். அது உலக வியப்புகளில் ஒன்றாகி விட்டது! வெளிநாட்டு அதிபர்களை எல்லாம் கொண்டு வந்து காட்டுகிறோம்! அதைப் பராமரிக்க நம்முடைய வரியில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறோம்!
கேட்டால் தொல்பெருஞ்சின்னம் என்கிறார்கள்! தொல்பெருஞ்சின்னம் கல்லணை அல்லவா! ஒரு கரிகாலன் பிறந்திருக்காவிட்டால், தமிழ்நாடு கஞ்சிக்கில்லாமல் செத்திருக்குமே!
ஒருவன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தில் கஞ்சிக்குப் போதாமல் கூலி கொடுத்து, அவர்களின் வியர்வையில், படுக்கை அறையில் மகிழ்வித்த காதலிக்குப் பளிங்கு மாளிகை எழுப்புவது பெருமையின் சின்னமா?, நம்முடைய அடிமைப் புத்தியின் சின்னமா?
நாம் எதைப் போற்றுகிறோம் என்பதைப் பொறுத்ததே நம்முடைய இலட்சணங்களெல்லாம். ஒரு நடிகை அல்லது நடிகன் இறந்து விட்டால், அவர்களின் சவ அடக்கத்துக்கு அரசு மரியாதை! போலீசுக்காரர்கள் துப்பாக்கியைத் தலகீழாய்ப் பிடிப்பார்கள்; பிறகு நிமிர்த்தி வானத்தை நோக்கி இருபத்தியொருமுறை சுடுவார்கள்! ஆங்கில வாத்தியக் கருவிகள் இசைக்கப்படும்! அந்த இசை கேட்டு அந்த நடிகையோ நடிகனோ சவப்பெட்டியில் புரண்டு படுப்பார்கள்!
சங்கிலியை அறுப்பவனைக் கண்டுபிடிக்க, நாம் வரி கொடுத்தால், இந்தப் போலீசுக்காரன் முதலமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் செத்ததற்கெல்லாம் வாத்தியம் வாசித்துக் கொண்டு திரிகிறான்!
நாம் ஒவ்வொரு தோசை தின்பதற்கும், முன்பெல்லாம் பன்னிரண்டு விழுக்காடு வரி கொடுத்தோம்; இப்போது ஐந்து விழுக்காடு! தோசை தின்பதற்கெல்லாம் எதற்கு வரி கொடுக்க வேண்டும்? நாம் தேநீர் குடித்தால் வரி, பீடி குடித்தால் வரி; அந்தப் பீடியைப் பற்ற வைப்பதற்குத் தீக்குச்சியை உரசினால் வரி!
எவனுக்குப் புரிகிறது? எங்கள் வாழ்வே! வரலாறே! என்று கூவுகிறானே! ஒரு முதலமைச்சரின் காருக்கு முன்னும் பின்னும் இருபத்தெட்டுக் கார்கள் போவதற்கு இவ்வளவு வரி கொடுக்க வேண்டியதிருக்கிறது!
ஒரு தோசைக்கு ஐந்து, பத்தென்று வரி போடுகிறானே என்று வயிறெரிந்தால், அப்புறம் எப்படி நடிகர் விசய்க்கும், பா.ச.க. அண்ணாமலைக்கும் "ஒய்' பிரிவு பாதுகாப்பு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் கொடுப்பது?
நாம் அதனால் ஒரு தோசையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது! நமக்கு இன்னொரு தோசைக்கு வழியில்லாத அரைப் பசியில்தான் அவர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது!
அவர்களின் தனி விமானப் பயண எளிமை எல்லாம், ஆட்சிக்கு வந்து நம்மை இரண்டாவது தோசை தின்ன வைப்பதற்குத்தான் என்கிறார்கள்! நாம் எதைத்தான் நம்பவில்லை?
சுதந்திரத் தொடக்கத்தில் நம் நாட்டில் ஒரு முதிர்ந்த முதலமைச்சர் இருந்தார். அவர் அரசுச் சுற்றுப் பயணம் போனார்! அரசுப் பயணியர் மாளிகையில் கொசுக்கடி தாங்க முடியவில்லை! தன்னுடைய உதவியாளரை அழைத்தார்!
ஒரு கொசுவலை வாங்கி வரச் சொல்லித் தன்னுடைய சொந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தார்! இல்லை; வேண்டாம்; ஒரு முதலமைச்சருக்கு அரசுப் பணத்தில் வாங்க அனுமதி இருக்கிறது என்று அந்த அலுவலர் சொன்னார்! இல்லை; வேண்டாம்; நாம் இதைச் செய்தால், அடுத்து வருகிறவர்கள் பயணியர் மாளிகையை அரண்மனையாக்கி விடுவார்கள் என்று மறுத்து விட்டார்!
அந்த மனிதன் ஒரு காலகட்டத்தில் வேதாரணியத்தில் உப்பெடுப்பதற்கு நெடுந் தொலைவு நடந்தவன்; சிறையையே வாழிடமாக்கிப் பல காலம் வாழ்ந்தவன்! நுகர்ச்சியன்று வாழ்வின் நோக்கம் எனப் புரிந்தவன்! அவன் தேறாத நூலுமில்லை; தெளியாத பொருளுமில்லை! நூல் நூற்றான்; குடியை வெறுத்தான்; திக்கற்ற பார்வதி என்று அதற்காக ஒரு கதை எழுதினான்! பிறகுதான் அவன் ஒரு கதையாசிரியன் என்று தெரிந்தது!
ஐ.நா. சபையில் பாடுவதற்காக ஒரு பாட்டு எழுதினான். அவன் புலவன் என்றும் புரிந்தது! நீண்ட காலம் வாழ்ந்தவன்! பெருந்தியாகங்கள் புரிந்தவன்! பெரும் பதவிகளில் பற்றற்று இருந்தவன்! அவனைக் "குடிகேடி' என்றார்கள்; "குல்லூகப் பட்டர்' என்றார்கள்; "ஆச்சாரியார்' என்று கேலி பேசினார்கள்! அவனைப் பதவியை விட்டுப் போகுமாறு கலகம் செய்தனர்!
வசதியற்ற அரசின் கீழ், ஒரே செலவில், ஒரே கட்டமைப்பில் இரண்டு மடங்கு மாணவர்கள் படிப்பதற்கு அவன் கொண்டு வந்த கல்வித் திட்டத்தைக் குலக் கல்வித் திட்டம் என்றனர்!
ஏதோ கணிதத்தில் ஒருங்கமைச் சமன்பாடுகளுக்கு (அல்ஜீப்ரா) பதிலாக, அறிவியலில் நியூட்டனுக்குப் பதிலாக மனுநீதியைப் பாடத்திட்டமாக்கி விட்டதுபோல், கூக்குரலிட்டனர்!
பாறை போல் இருந்தான் அந்த மாமனிதன்! பதவி மற்றவர்களுக்குத் தலைப்பா? அவனுக்குச் செருப்பு! கால்தான் முக்கியம்! செருப்பில்லை! கழற்றி எறிந்து விட்டுப் போய் விட்டான்!
நீண்ட வாழ்வில், குறையொன்றுமில்லை கோவிந்தா என்று கடவுளுக்குச் செய்தி சொல்கிறான்! கடவுள் அதிர்ந்து விட்டான்; இப்படி ஒரு வார்த்தையை அவன் கேட்டதே இல்லை!
கணியன் பூங்குன்றன் போல் இந்த மாமனிதன் எழுதியது ஒரே பாட்டு!
இன்னும் இரண்டாயிரம் ஆண்டு நிற்கும்!
தருமன் பிழை செய்யவில்லையா?
இராமன் பிழை செய்யவில்லையா? தன் பங்குக்கு அம் மாமனிதனும் ஒரு பிழை செய்ய வேண்டாமா? செய்தான்! முன்னின்று செய்தான்! முனைப்போடு செய்தான்!
இப்போது நம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பை ஆசீர்வாதம் செய்து அரியணை ஏற்றியவன் அந்த மாமனிதன்தான்! திராவிட மாடல் கூட்டம் அவன் பரிந்துரைதான்!
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.