அது ஒரு கண் மருத்துவமனை. சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் வரிசையாக அமர்ந்திருந்தவர்களில் இவன் ஐந்தாவது ஆள். இவனுக்கு அடுத்தாற்போல எத்தனை பேர் என்பதைப் பற்றி இவனுக்குக் கவலை இல்லை. எப்படியும் கண்ணில் மருந்து ஊற்ற அவள்தான் வருவாள். இதை உறுதிப்படுத்துவதற்காகவே இரண்டு முறை இதே மருத்துவமனைக்கு வந்திருக்கிறான்.
ஆம். அவள் தான் வந்திருக்கும் அனைவரது கண்களுக்கும் மருந்து விடுகிறாள். அதுபோதும் அவனுக்கு. இன்னொரு முக்கியமான விஷயம், அவனுக்குக் கண்ணில் எந்த பிரச்னையும் இல்லை என்பதுதான். பின்னர் ஏன் அவன் இந்தக் கண் மருத்துவமனைக்கு வந்து இப்படி உட்கார்ந்திருக்கிறான் என்றால்... அவளை மிக அருகில் பார்க்க வேண்டும், அவளது பெயரைத்
தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.
கண் மருத்துவமனையின் பளீர் வெளிச்சமும், சுத்தமான புறச்சூழலும், ஒருவித ஏகாந்தத்தை சந்திரனுக்குள் புகுத்தியது. யார் ஊழியர்; யார் வாடிக்கையாளர் என்று வகைப்படுத்த முடியாத அளவுக்கு அந்த மருத்துவமனையே ஜொலித்தது. எப்போதும் அழகாகத் தெரிபவள் இன்று அவனுக்குப் பேரழகாகத் தெரிந்தாள்.
சந்திரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சந்திரனுக்குத் திருமணமாகி, இரு குழந்தைகளும் மூன்றாம் வகுப்பு, முதலாம் வகுப்பு எனப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் ஏன் சந்திரன் இப்படி...? என நீங்கள் கேட்கலாம். அதுதான் சந்திரன்.
சந்திரனின் இயல்பிலேயே ஒரு 'சபலிஸ்ட்'. அழகான பெண்களை ரசிப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம். சினிமாவில் கனவுக் காட்சிகள் வருவதுபோல, அழகான பெண்களுடன் கற்பனையில் உலாவுவது அவனுக்குத் தனி இஷ்டம்.
அது என்னவிதமான மனநிலை என்று தெரியவில்லை. இவனுக்குள் இருக்கும் அழகுக்கான இலக்கணத்துடன் யாராவது தென்பட்டால் அவர்களின் மீது சந்திரனுக்கு ஒருவித மையல் வந்துவிடும். அதில் இன்னொரு விநோதம் என்னவென்றால், அவர்கள் யாருக்குமே சந்திரனின் மையல் பற்றித் தெரியாது.
இன்னொரு முக்கியமான தகவல், அவர்கள் எல்லோருமே சந்திரனுக்கு மட்டுமல்ல... அவனது மனைவிக்கும் அறிமுகமானவர்கள். அவனது மகளின் டியூசன் டீச்சர், காம்பவுன்டில் முன் வீட்டிலிருக்கும் அவனது மனைவியின் தோழி, காம்பவுன்ட் வாசலில் கடை வைத்திருப்பவரின் மகள், மகளிர் குழுத் தலைவி என அந்தப் பட்டியல் நீளும்.
அவர்களிடமிருந்து வரும் சின்ன சிரிப்பைக்கூட அவனது மையலுக்குக் கிடைத்த பச்சை அங்கீகாரமாக நினைத்து சந்தோஷப்படுவான். மகளை டியூசனுக்கு கொண்டுபோய் விடும்போதும், பக்கத்து வீட்டைத் தாண்டும்போதும், தினசரி ஒரு முறையாவது அந்தக் கடைக்குச் செல்வதிலும், குழுத் தலைவியின் வாட்ஸப் úஸட்டஸூக்கு பாராட்டுத் தெரிவித்ததால் கிடைக்கும் புன்சிரிப்பிலும் சந்திரனின் மையல் நிலைபெற்றிருந்தது. அந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் புதிய வரவுதான் இப்போது அவன் ரசித்துக்கொண்டிருக்கும் 'அவள்'.
இன்று அவனது ஆசை நிறைவேறப்போகிறது. மிக மிக நெருக்கமாக அவளைப் பார்க்கப் போகிறான். யாருக்கும் தெரியாமல் அவள் அழகை மிக மிக ரகசியமாக ரசிக்கப் போகிறான். முக்கியமாக அவளது பெயரைத் தெரிந்துகொள்ளவும் போகிறான்.
இதோ வந்துவிட்டாள் இன்னும் மூன்று பேர்தான். சந்தன நிறத்தில் தேவதையாகக் காட்சியளித்த அவள் ஒவ்வொருவருக்கும் மருந்து ஊற்றிவாறு வந்து கொண்டிருந்தாள். மருந்து ஊற்றி பின் அவர்களிடம் சிரித்த முகத்துடன் ஏதோ சொல்லி கையில் சிறு வெண்பஞ்சு துண்டைத் தருகிறாள்.
சந்திரனுக்குப் படபடப்பாக இருந்தது. பக்கத்தில் நின்று கொண்டு வாட்சில் மணி பார்த்தவள் இன்னும் பக்கத்தில் வந்தாள். கழுத்தில் அடையாள அட்டை தொங்கியது. பெயரைப் பார்க்க நினைத்தவனுக்கு அவள் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்பதால், அடையாள அட்டையை அப்புறம் பார்க்கலாம். முகத்தைப் பார்த்து ரசிப்போம் என முடிவெடுத்தான்.
பக்கத்தில் வந்தாள். சந்திரனின் நாடியைப் பிடித்து தலையை மேல் நோக்கி இருப்பது போல் வைத்தாள். அவள் இரு விரல்களால் அவனது கண்களை அகலமாகத் திறந்தாள். ஆஹா எத்தனை அழகு... எத்தனை அழகு. நெற்றி வகிடு, கோபிப் பொட்டு, குங்குமக் கீற்று, கன்னத்தில் ஒரு பளபளப்பு, மூக்கின் மீது லேசான வியர்வைத் துளி, நாவல் பழ நிற உதடுகள், காதோர முடி என மூன்று நொடிக்குள் அத்தனையையும் ரசித்தபோது, சந்திரனின் கண்ணில் மருந்துச் சொட்டு விழுந்து சுரீர் என்றது. கண்களை சிக்கென்று மூடி ஆக வேண்டிய கட்டாயம். மூடி விட்டான். அவன் கைகளில் பஞ்சு துண்டை வைத்து நகர்ந்தாள். வேறெதுவும் பேசவில்லை.
கண்களை மூடிக் கொண்டான். மனதைப் பின்னோக்கி ஓடவிட்டான். அவன் எப்படி அவளை முதன்முதலில் சந்தித்தான் என்பதை அசை போட்டான். தினசரி வேலைக்குப் போகும்போது எந்த மாநகரப் பேருந்து முதலில் வருகிறதோ, அதில் ஏறி, இவனது நிறுத்தம் வந்ததும் இறங்குவதுதான் வழக்கம். அப்படித்தான் அன்று அவள் வரும் பேருந்தில் அவனுக்கு ஏற நேர்ந்தது.
பேருந்தின் கதவு திறந்ததும் ஏறியவனை சட்டென்று அவளும் திரும்பிப் பார்க்க, இவனும் பார்க்க கண்கள் சந்தித்துக் கொண்ட அந்த இரண்டு விநாடிகள் சந்திரனின் உடலில் மையலுக்காக சுரக்கும் திரவம் சுரந்து, உடம்பெல்லாம் வேதியல் மாற்றம் உண்டானது.
மீண்டும் ஒரு முறை அவள் இவனைப் பார்க்க மையலை உறுதிப்படுத்தினான். அவள் திரும்பி விட்டாள். கூட்டமாக இருந்ததால் அவன் அங்கேயே நின்றுவிட்டான். அதன்பின் இவன்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவள் பார்க்கவில்லை.
பயணம் பத்து நிமிடம் தொடர்ந்தது. சந்திரன் ஏறும் நிறுத்தத்திலிருந்து இரண்டு நிறுத்தங்கள். ஏறத்தாழ பத்து நிமிடப் பயணத்தில் வரும் கண் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கினாள். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த இவனைக் கடந்துபோகும்போது அவள் போட்டிருந்த சென்ட் இவனை இன்னும் அவள் பக்கம் ஈர்த்தது. அப்போதே அவன் முடிவெடுத்து விட்டான் தினமும் இதே பேருந்தில்தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று.
மறுநாள் அதே நேரம் அதே பேருந்தில் ஏறினான். அதே இடத்தில் அவள். கதவு திறந்து ஏறியவனை அவள் பார்க்க, தினமும் இந்த பேருந்தை விடக்
கூடாது என உறுதிப்படுத்திக் கொண்டான். என்றைக்கு முதன்முதலில் இவளைப் பார்த்தானோ, அன்றிலிருந்து இந்தப் பேருந்தையே நோக்கமாகக் கொண்டு மிகச்சரியாக வந்து நின்றுவிடுவான். ஏறிவிடுவான். அவளைப் பார்த்துவிடுவான். மொத்தமாக இது தொடர்ந்தது ஒரு வாரம்தான். அதற்குள் சந்திரன் இன்று மருத்துவமனையில் இருக்கிறான்.
மிகவும் புத்திசாலித்தனமாக சந்திரன் ஒரு காரியம் செய்தான். கண்களை அடிக்கடி திறந்து அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் ரசித்துக்கொண்டான். இதில் இரண்டு சாதகம் அவனுக்கு. ஒன்று அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரசித்துப் பார்ப்பது. இரண்டாவது அப்படிக் கண்ணைத் திறந்தால் மீண்டும் மருந்து ஊற்ற வேண்டும். அப்போது மீண்டும் அவளை ரசிக்கலாம் என்கிற எண்ணம் அவனுக்கு.
கண்களை மூடியிருந்த சந்திரனுக்கு நறுமணம் வீசியது. கண்களைத் திறக்க அவள் சொல்லும் முன் இவனே திறந்தான். கண்ணுக்கு நேராக டார்ச் ஒளி அடித்தாள். கண்கள் கூசின. அவளை ரசிக்க முடியவில்லை.
'இவரை 8-ஆம் நம்பர் ரூமுக்குக் கூட்டிட்டுப் போங்க' என்று அங்கிருந்த அட்டென்டரிடம் அவள் சொன்னதும் இவனுக்கு அதிர்ச்சி. அவனைக் கைத்தாங்கலாகக் கண் பரிசோதனைக்கு 8-ஆம் நம்பர் அறைக்கு அழைத்துச் சென்றான் அட்டென்டர் பையன். அடுத்த அரை மணி நேரம், இரண்டு மூன்று தடவை கண்ணில் சொட்டு மருந்து போடப்பட்டது. மருந்து போட்டது அவளில்லை, அட்டென்டர் பையன். சந்திரன் மனமொடிந்து விட்டான்.
ஒரு வழியாகக் கண் மருத்துவருக்கு முன்னால், இருந்த பரிசோதனைக் கருவியில் தாடையை வைக்கும் முறை வந்தது. இரண்டு கண்களையும், ஒன்று மாற்றி ஒன்று, அந்தக் கருவியின் மூலம் பரிசோதனை நடத்தினார் பயிற்சி மருத்துவர். பரிசோதனை முடிந்து, 'உங்களுக்கு ஒன்றுமில்லை போகலாம்' என்று அவர் சொல்வார் என்று பார்த்தால், சந்திரனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
'நான் ரிப்போர்ட்டை அனுப்பி விடுகிறேன். நீங்கள் டாக்டரைப் பாருங்கள்' என்று அவர் சொன்னபோது, 'எதற்காக இங்கே வந்தோம்' என்று சந்திரன் மனது சலித்துக் கொண்டது.
'எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது...?'
'அதை நான் சொல்ல முடியாது. நீங்கள் டாக்டரைப் பாருங்கள், அவர் சொல்வார்.'
அதற்கு மேல் பயிற்சி மருத்துவரிடம் எதுவும் கேட்க வழியில்லாமல், அடுத்த நோயாளி பரிசோதனைக்கு வந்துவிட்டார். அட்டென்டரைத் தேடியபோது, இன்னும் சிலருக்குக் கண்ணில் சொட்டு மருந்து விட்டுக்கொண்டிருந்த 'அவள்' தென்பட்டாள். சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி விடலாம் என்கிற எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டான் சந்திரன்.
அவளது பெயரைத் தெரிந்துகொள்ளும், மின்னல் வெட்டுப்போல கண்ணோடு கண் சந்தித்தும் புன்சிரித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் அந்த வாய்ப்பை எதிர்பார்த்து, வெளியேறாமல் பெரிய டாக்டரைப் பார்ப்பது என்று முடிவெடுத்தான்.
சொட்டு மருந்து விட்டுக்கொண்டிருந்த அவளருகில் சென்று, 'பெரிய டாக்டர் அறை எங்கே இருக்கிறது?' சந்திரன் கேட்டபோது, திரும்பிப் பார்க்காமல், இயந்திரத்தனமாக, 'முதல் மாடிக்குப் போங்கள்' என்று அவளிடமிருந்து பதில் வந்தது.
காது கேட்காததுபோல, சந்திரன் மீண்டும் கேட்ட போது, 'அவள்' பதில் சொல்வதற்குள் அட்டென்டர் பையன், பூஜை வேளைக் கரடிபோல அங்கே வந்துவிட்டான். 'இது கண் ஆஸ்பத்திரி. காது கேட்கவில்லை என்றால் அதுக்கு வேற ஆஸ்பத்திரிக்குப் போகனும்' என்று அவனுக்கு அட்டென்டர் வழிகாட்டியபோது, சந்திரனுக்கு அசடு வழிந்தது. அதற்குள் 'அவள்' அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
அட்டென்டர் பையன் விடவில்லை. சந்திரனைக் கையோடு அழைத்துச் சென்று பெரிய டாக்டர் அறையில் கொண்டுபோய் உட்கார வைத்து விட்டான். அதன் பிறகென்ன? அவனது முறை வந்தது. முதலில் உதவி டாக்டர் பரிசோதித்து, அடுத்தாற்போல பெரிய டாக்டர் பரிசோதனையும் நடந்தது. அவர்களுக்குள் ஏதோ ஆங்கிலத்தில், மருத்துவ பாஷையில் பேசிக்கொண்டார்கள்.
அவனை வெளியில் போய் உட்காரச் சொன்னார்கள். உதவி டாக்டர் வந்தார்.
'இன்ஷ்யூரன்ஸ் இருக்கிறதா?'
'இன்ஷ்யூரன்ஸா? எதற்கு?'
'இருக்கா, இல்லையா...?'
'முதல்வர் மருத்துவக் காப்பீடு இருக்கிறது...'
'எனக்கு எதுவும் இல்லை, அவளைப் பார்ப்பதற்காக நான் போட்ட நாடகம் இது' என்று சொல்ல வேண்டும்போல இருந்தது. வார்த்தை வெளிவரவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்ததுதான் தாமதம், வியர்த்துக் கொட்டியது.
மீண்டும் அட்டென்டர் பையன் வந்தான். அழைத்துச் சென்றான். மீண்டும் சொட்டு மருந்து விட்டுப் பரிசோதனை செய்தார்கள். 'அவள்' வருவாள் என்று பார்த்தான், வயதான நர்ஸ்தான் அவனுக்கு சொட்டு மருந்து விட வந்தாள்.
மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு, 'அவள்' அவனிடம் வந்தாள். 'கண்ணகி, இவரிடம் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள்' என்று உதவி டாக்டர் சொன்னபோது அவள் பெயர் 'கண்ணகி' என்று சந்திரன் தெரிந்துகொண்டான். கண் ஆஸ்பத்திரிக்கு ஏற்ற பெயர் என்று நினைத்துக் கொண்டான். அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.
அவனது ரிப்போர்ட்டை படித்துவிட்டு நர்ஸ் கண்ணகி அவனிடம் மிகவும் ஆதரவாகப் பேசத் தொடங்கினாள்.
'சந்திரன் சார், 'டோனோமெட்ரி' ரீடிங் ரிசல்ட் வந்திருக்கு. உங்களுக்கு ரொம்ப நாளாகவே 'ஆக்குலர் ஹைப்பர்டென்ஷன்' என்கிற ரத்த அழுத்தம் போன்று கண் அழுத்தம் இருந்திருக்கு. அதை நீங்க கவனிக்காம விட்டதால், 'அக்வஸ் ஹ்யூமர்' என்கிற பாதிப்பு ஏற்பட்டிருக்கு. கண்ணுக்கு வர்ற நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு.'
'எனக்கு எதுவுமே இல்லை. நல்லாத்தான் பார்வை இருக்கு' என்று அவன் முணுமுணுத்ததை அவள் சட்டை செய்யவில்லை. தொடர்ந்தாள்:
'ஆக்குலர் ஹைப்பர் டென்ஷன் இருக்குன்னு பலருக்கும் தெரியாமலே இருந்துடும் உங்களைப்போல. நீங்க சரியான நேரத்தில பரிசோதனைக்கு வந்ததால ஓரளவுக்கு பாதிப்பைக் குறைத்து விடலாம். அப்படியே விட்டால், படிப்படியா பார்வை மங்கத் தொடங்கி, ஒரு கட்டத்தில் முழுசாப் பார்வை இழக்க நேரிடும்'
'எனக்கு நீங்க சொல்றது புரியலையே...' என்று அழாத குறையாக சந்திரன் சொல்லும்போது, விதி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அவள் சொன்னாள்:
'கண் உயர் ரத்த அழுத்தம் என்றால் கண்களின் அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருக்கும். ஒரு மருத்துவப் பிரச்னை. இந்த அதிகரித்த கண் அழுத்தம் சரிபார்க்கப்படாமல் இருந்தால் அது 'க்ளுக்கோமா' என்கிற மீள முடியாத பார்வை இழப்பு, விழித்திரை நரம்பு அடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிகோலும்.'
இப்போதெல்லாம் மூன்று வேளையும் சந்திரனுக்கு அவனது மனைவிதான் சொட்டு மருந்து விடுகிறாள். கண்ணகியை மட்டுமல்ல, வேறு எந்தப் பெண்ணையும் அவன் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. சபலத்துடன் திரிந்த சந்திரன், இப்போது தனக்கு நேர்ந்திருக்கும் அவலத்தை நினைத்து மனதுக்குள் அழுகிறான்.
ஆனால், கண்ணகியின் பார்வை பட்ட நேரம், அவனது கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததே. அது வரைக்கும் ஆறுதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

நீதிக் கதைகள்! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம்!
உறவுப்பாலம்
இனிப்பில் தங்கிய கசப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

