மாதவையாவின் 'கிளாரிந்தா'
தமிழ் நவீனத்தின் முதல் மூன்று மூலகர்த்தாக்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் அ.மாதவையா.


தமிழ் நவீனத்தின் முதல் மூன்று மூலகர்த்தாக்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் அ.மாதவையா. தமிழிலும், ஆங்கிலத்திலுமாக அவர் எழுதிய பத்மாவதி சரித்திரம் (1898), முத்து மீனாட்சி (1903), விஜயமார்த்தாண்டம் (1903), தில்லைக் கோவிந்தன் (1903), சத்தியானந்தன் (1909) நாவல்களின் வரிசையில், "கிளாரிந்தா'வையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்நாவல் சரித்திரம் தழுவிய வெறும் தொடர்கதை அல்ல; மனித இயல்புகளை மிக ஆழத்தில் ஆய்ந்து விளக்குகின்ற ஓர் உருக்கமான காதல் கதை.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருங்கே புலமை பெற்றிருந்த மாதவையா "கிளாரிந்தா'வை ஆங்கிலத்தில் எழுதி 1915-ஆம் ஆண்டில் தாமே பதிப்பித்தார். ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் "தி ரைட் ஹானரபிள்' என்ற பட்டம் வழங்கப்பட்டவரும் 'சில்வர் டங்' என்று போற்றப்பட்டவருமான வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரியாருக்கு இந்நூலினை அவர் சமர்ப்பித்தார்.
நூலின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையில், "நமது கதாநாயகி ஒரு சரித்திர பாத்திரம்; வியப்பு மிகுந்த அவள் வாழ்க்கை குறித்து சில விவரங்களே கிடைக்கின்றன. பிறவற்றை உத்தேசத்தாலும் கற்பனையாலும் இட்டு நிரப்பவேண்டியுள்ளது. நாவலில் அவள் வாழ்க்கைச் சித்திரத்தை முழுமையாகத் தீட்ட முயன்றிருக்கிறேன். நான் கற்பனை செய்திருக்கும் விவரங்கள் நடந்திருக்க முடியாதனவல்ல; பயனில்லாதவையும் அல்ல என்று நம்புகின்றேன்' என்று மாதவையா கூறியுள்ளார். அந்தப் பதிப்பின் பின்னால் அவர் சேகரித்த வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
இலக்கியச் சுவையில், "பத்மாவதி சரித்திர'த்துக்குச் சற்றும் குறைவில்லாத "கிளாரிந்தா' நாவல், ஆங்கிலத்தில் வெளியாகி 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மறைந்த ஆங்கிலப் பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
இந்நாவலின் பின்னணி 1746-ஆம் ஆண்டில் கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையிலான இந்தியப் படைக்கும், என்ஜினீயர் பராடிஸ் தலைமையிலான பிரெஞ்சுப் படைக்கும் நடைபெற்ற கடும் போருடனும், தஞ்சாவூரில் ஆண்ட மராட்டிய அரசர் பிரதாப சிம்மனின் ஆட்சியுடனும் இயங்கி நிற்கிறது. பிரதாப சிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பண்டித ராவின் பேத்தி கோகிலா என்கிற உண்மையான வரலாற்றுப் பாத்திரம்தான், இந்த நாவலின் நாயகி. பிறந்த அன்றே பெற்றோரை இழந்து, தாத்தாவால் வளர்க்கப்பட்டு, முதியவர் ஒருவருக்குப் பால்ய மணம் செய்து கொடுக்கப்பட்டவர் கிளாரிந்தா. இருபது வயதில் விதவையான அந்தப் பெண்ணை, சொத்துக்காகக் கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றுகிறார்கள்.
செய்தி அறிந்த ஆங்கில தளபதி ஹாரி லிட்டில்டன் அவளைச் சிதையிலிருந்து காப்பாற்றி வந்து சிகிச்சை அளிக்கிறார். அதனால், குலத்திலிருந்து கிளாரிந்தா முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டார். தன் உயிரைக் காத்த லிட்டில்டனுடன் காதலாகி, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, பாளையங்கோட்டையில் லிட்டில்டன்னுடன் 'திருமண' வாழ்வு நடத்துகிறாள். லிட்டில்டன் மறைந்த பிறகும், அவள் பல நற்பணிகளிலும் கிறிஸ்தவ சமூக சேவையிலும் ஈடுபட்டுப் புகழெய்தி, இறுதியில், பாளையங்கோட்டையில் தான் எழுப்பிய புனிதக் கோயிலின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறாள்.
நாவலின் மூன்றாம் பாகத்தின் பதினோராவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கடிதத்தின் இறுதியில் ஹாரி லிட்டில்டன் இப்படிக் குறிப்பிடுகிறார். "என் அன்பே, நான் விடைபெறுகிறேன். இதைவிடச் சிறந்த ஓர் உலகத்தில் நாம் மீண்டும் சந்திக்கும் வரை கடவுள் உன்னைப் பாதுகாப்பாராக; அவருடைய எல்லையற்ற கருணையினால் என்னையும் மன்னிப்பாராக...'
இச்சரித்திர நாவலின் மெய்யுணர்வாக பாளையங்கோட்டையில் கிளாரிந்தாவின் கல்லறையும், அவர் தோற்றுவித்த திருச்சபையும், கட்டிய தேவாலயமும், இன்றளவும் விஞ்சித்து நிற்கின்றன. இந்த உண்மைக் கதை நிகழ்ந்து சுமார் 150 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த எழுத்தாளர் மாதவையா மறைந்து கடந்த 22-10-2025 அன்று நூறாண்டுகளும், இந்நாவல் வெளியாகி 110 ஆண்டுகளும் ஆகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...