எஸ். குருவன்மீகநாதன்
சென்னை: தமிழகத்தில் மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றும் திட்டத்தின் முதல் ஒப்பந்தத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடட் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், ஒப்பந்தம் கோரியிருந்த நிறுவனங்களில் அதானி குழும நிறுவனம்தான் மிகக் குறைந்தத் தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருப்பதாகவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதானி எனர்ஜி நிறுவனத்தின் தகவல்கள் கூறுவது என்னவென்றால், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் அந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருப்பதைக் காட்டுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மீட்டர்கள் நிறுவப்பட வேண்டும் என்பதும், மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் இந்த திட்டத்துக்கு ரூ.19,000 கோடி ஒதுக்கப்படும் என்பதும்.
ஒப்பந்தங்களுக்கான மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவலின்படி, நிதி ஏலத் தொடக்க நிலையில் உள்ள இந்த திட்டத்தின் முதல் தொகுப்பை அதானி எனர்ஜி நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரிய எல்1 ஏலதாரராக இருக்கிறது. எவ்வாறாயினும், ஒப்பந்தம் வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றுதான் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நான்கு தொகுப்புகளைக் கொண்டதாக இந்த திட்டம் நிறைவேற்றப்படவும், ஒவ்வொரு தொகுப்பும், வெவ்வேறு மாவட்டங்களில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மொத்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் இந்த திட்டத்தின்படி பொருத்தப்படவிருக்கிறது. அதாவது, இத்திட்டத்தின் கீழ் அதிக ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்ற அனுமதி பெற்றிருப்பது தமிழ்நாடுதான் என்பதும் ஒவ்வொரு தொகுப்பிலும் சுமார் 80 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டாலும், சில சட்ட சிக்கல்களால் ஒப்பந்தத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டிருந்தாலும் கூட தாமதம் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் தொகுப்பு அதானி எனர்ஜி நிறுவனத்துக்கே இறுதி செய்யப்பட்டால், ஸ்மார்ட் மீட்டர்களை வடிவமைத்து, கட்டமைத்து, அதற்கான நிதியை ஏற்படுத்தி செயல்படுத்தி, மீட்டர்களைக் கொண்டு செல்வது போன்ற வேலைகளை மேற்கொண்டு, மேம்படுத்தப்பட்ட மீட்டர் கட்டமைப்பு சேவை வழங்குநராக நியமிக்கப்படும். மத்திய அரசின் திட்ட வழிகாட்டுதல்களின்படி, இந்த நிறுவனம்தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் உள்கட்டமைப்பை செயல்படுத்தி நிர்வகிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மின் பயன்பாட்டுக்கான அளவீட்டு உள்கட்டமைப்பை வழங்குதல், பராமரித்தல் மற்றும் இயக்குவது என அனைத்தும் இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும். மூலதனச் செலவின் ஒரு பகுதியை முதலில் அரசு, ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துக்கு செலுத்தும். அதே வேளையில், மீதம் உள்ள தொகையானது, ஒரு மீட்டருக்கு ஒரு மாதம் என்ற அடிப்படையில் செயல்பாட்டு மற்றும் பராமரிப்புக் காலத்தில் தொகை செலுத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் கூறுகையில், அதானி குழுமம் ஒரு சில மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சேவைக் கட்டணமாக மாதத்துக்கு ரூ.120க்கும் குறைவான விலையை மேற்கோள்காட்டியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்குக் கோரப்பட்ட விலை அதிகமாக உள்ளது. "விலையைக் குறைக்க ஏலதாரருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில், தற்போது அதானி எனர்ஜி நிறுவனம், நுகர்வோருக்கான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவும் பணிகளை, மகாராஷ்டிரம், ஆந்திரம், உத்தரகண்ட் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம் மாநிலத்தில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் 16 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் கட்டணங்களை அளவிடுவது மற்றும் கட்டணத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றை சிறப்பானதாக மாற்றவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முயற்சியாக, தமிழக மின் வாரியம் சார்பில் ஏற்கனவே சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.10 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை சோதனை அடிப்படையில் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.